தயாநிதி Vs கலாநிதி: ‘குடும்ப பிரச்னைதானே தவிர; வர்த்தக பிரச்னை இல்லை!’ சன் குழுமம் விளக்கம்
“ஊடக செய்திகளில் கூறப்படும் அறிக்கைகள் "தவறானவை, தவறாக வழிநடத்துபவை, ஊகமானவை, அவதூறானவை மற்றும் உண்மைகளால் ஆதரிக்கப்படாதவை" என்று சன் டிவி நெட்வொர்க் தெரிவித்து உள்ளது”

சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகள் விற்பனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று உள்ளதாக திமுக எம்.பி தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுகளுக்கு சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு உள்ள சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனுக்கு, அவரது சகோதரரும், திமுக எம்பியுமான தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில், கலாநிதி மாறன், சன் குழும நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலைக்கு தனக்குத்தானே ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும், இதன் மூலம் சன் குழுமத்தில் 60% உரிமையை மற்ற பங்குதாரர்களிடம் கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் பங்குச்சந்தையில் இன்று காலை சன் குழும பங்குகள் 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. இந்த நிலையில், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம், அதன் புரமோட்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த ஊடக செய்திகளுக்கு விளக்கமளித்து, இந்த விஷயங்கள் நிறுவனத்தின் வணிகத்துடன் தொடர்பில்லாதவை என்று விளக்கம் அளித்து உள்ளது.