‘தமிழகத்தில் குறைந்தது குழந்தைகள் பிறப்பு விகிதம்..’ 2019க்குப் பின் தொடர் சரிவு!
வடமாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, அதன் எண்ணிக்கை பெரிய அளவில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த 2019 ம் ஆண்டு முதல், தமிழகத்தில் பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையாக, 7 கோடியே 21 லட்சம் பேர் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இது தேசிய அளவிலான மக்கள் தொகை உடன் ஒப்பிடும் போது, தமிழகம் 7 வது இடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியும், இந்திய சுகாதாரத் துறையும் கணித்துள்ள விபரங்களின் படி, நாட்டின் சராசரி மக்கள் தொகையின் வளர்ச்சி, 0.92 சதவீதமாக தற்போது உள்ளது.
முன்னணியில் வடமாநிலங்கள்
அதே நேரத்தில் மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தேசிய அளவை விட அதிக சராசரியை சில மாநிலங்கள் வைத்துள்ளன. குறிப்பாக பீகார் மாநிலம் 1.98 சதவீதமும், உ.பி., 1.70 சதவீதமும், மேகாலயா மாநிலம் 1.5 சதவீதமும், ம.பி., மாநிலம் 1.49 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சியை பெற்றுள்ளன. அதே போல முக்கிய மாநிலங்களாக கருதப்படும் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்திலும் முறையே 0.71 மற்றும் 0.78 சதவீதம் மக்கள் தொகை வளர்ச்சியடைந்துள்ளது.
வடமாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது. கேரளாவில் 0.22 சதவிதமும், ஆந்திராவில் 0.61 சதவீதமும், கர்நாடகாவில் 0.68 சதவீதமும், தெலுங்கானாவில் 0.74 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2019 ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது. இதோ அதன் விபரம்:
2019ல் பிறந்த குழந்தைகள்:
9,45,701 (9 லட்சத்து 45 ஆயிரத்து 701 )
2020ல் பிறந்த குழந்தைகள்:
9,39,783 ( 9 லட்சத்து 39 ஆயிரத்து 783 )
2021ல் பிறந்த குழந்தைகள்:
9,12,864 (9 லட்சத்து 12 ஆயிரத்து 864 )
2022ல் பிறந்த குழந்தைகள்:
9,36,367 ( 9 லட்சத்து 36 ஆயிரத்து 367)
2023ம் பிறந்த குழந்தைகள்:
9,02,306 (9 லட்சத்து 2 ஆயிரத்து 306 )
2024 ம் ஆண்டில் கடும் சரிவை சந்தித்த தமிழகம்
ஆனால், 2024 ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 மட்டுமே. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இதற்கு முன் இந்த அளவிற்கு ஒரு சரிவை தமிழகம் சந்தித்தது இல்லை என்று தெரிகிறது. குழந்தை பிறப்பில் தமிழகம் சந்தித்திருக்கும் இந்த சரிவு, மக்கள் தொகையிலும் எதிரொலிக்கும்.
2019 ம் ஆண்டிற்கும் 2024ம் ஆண்டிற்கான ஒப்பீடு என்று பார்க்கும் போது, 1 லட்சத்து 3 ஆயிரத்து 880 குழந்தைகளின் பிறப்பு, தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, இது 11 சதவீதம் வீழ்ச்சியாகும். அதுவே 2023 ம் ஆண்டு பிறப்பு விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 60 ஆயிரத்து 485 குழந்தைகள் குறைவாக பிறந்திருப்பது தெரிய வருகிறது. சதவீதமாக பார்த்தால், 6.71 சதவீதம் தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது.
டாபிக்ஸ்