தொடர்ந்து ஏறுமுகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.. கூடுதல் பொறுப்பால் வரும் சவால்கள்..
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தொடர்ந்து ஏறுமுகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.. கூடுதல் பொறுப்பால் வரும் சவால்கள்..

தொடர்ந்து ஏறுமுகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.. கூடுதல் பொறுப்பால் வரும் சவால்கள்..

Malavica Natarajan HT Tamil
Updated Apr 27, 2025 10:00 PM IST

தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள எஸ்.எஸ்.சிவசங்கருக்கு தற்போது கூடுதலாக மின்சாரத்துறை இலாகா பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் சந்திக்க உள்ள சவால்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

தொடர்ந்து ஏறுமுகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.. கூடுதல் பொறுப்பால் வரும் சவால்கள்..
தொடர்ந்து ஏறுமுகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.. கூடுதல் பொறுப்பால் வரும் சவால்கள்..

சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பு

இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கவனித்து வந்த இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத் துறைக்கான பொறுப்பு கூடுதலாக தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பில் சந்திக்க உள்ள சவால்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

எஸ்.எஸ்.சிவசங்கர் அரசியல் வாழ்க்கை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள தேவனூரில் பிறந்தவர் சிவசங்கர். பொறியியல் பட்டதாரியான இவர், திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டின் மூலம் அரசியல் வாழ்க்கையில் நுழைந்தவர். பின்னர், படிப்படியாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு திமுக ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.

பின் பெரம்பலூர் மாவச்ச ஊராட்சி துணை தலைவர், அரியலூர் மாவட்ட ஊராட்சி குளு உறுப்பினராக இருந்தார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.

சொந்த மாவட்டத்தை தவிர்க்க வைத்த வெற்றி

இந்த வெற்றியைத் தொடர்ந்து, தன் சொந்த மாவட்டம் அரியலூரில் போட்டியிடுவதை விட்டு, பக்கத்து மாவட்டமான பெரம்பலூரின் குன்னம் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2 முறை சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை ருசிகண்டவர் இந்த முறை அவரது சொந்த மாவட்டமான அரியலூர் தொகுதியில் போட்டியிட்ட போது வெற்றிவாய்ப்பை இழந்தார். இதனால், இந்த முறை வெற்றியை தவறவிடக்கூடாது என நினைத்து 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றியும் கண்டார்.

அமைச்சர் பதவி

இப்படி 3 முறை வெற்றி கண்ட இவருக்கு, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைச்சரவையில் இடம் அளித்தது. இவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக்கியது திமுக அரசு. ஆனால், இந்தப் பதவி நீண்ட நாட்களாக நீட்டிக்கப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் ராஜ கண்ணப்பன் வைத்திருந்த போக்குவரத்து துறை இலாகா, சிவசங்கர் கைக்கு வந்தது.

சுற்றி வளைத்த பிரச்சனைகள்

போக்குவரத்து துறை சிவசங்கருக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. உட்கட்சி பிரச்சனை ஒருபுறம், பேருந்துகள் தனியார் மயமாக்கல், மகளிருக்கு இலவச பேருந்து, பராமரிக்கப்படாத பேருந்துகள், ஓட்டுநர், நடத்துநர் தேர்வு, புதிய பேருந்துகளுக்கு டெண்டர், புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கம் என சிவசங்கரை சுற்றி சுற்றி எல்லா பக்கத்தில் இருந்தும் கேள்விகள் பறந்து வந்தது.

ஆரம்பத்தில் தடுமாறிய அமைச்சர், பின் துறைக்கான பல்ஸை பிடித்துக் கொண்டு நிதானமாக செல்ல ஆரம்பித்தார். இருப்பினும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதா என்ற கேள்வி அவரை சுற்றி சுற்றி அடித்த வண்ணம் தான் இருக்கிறது.

சொந்த தொகுதியில் பேருந்து பற்றாக்குறை

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்போரின் கோரிக்கைக்கு செவிகொடுத்து புதிய பேருந்துகளை கோரிக்கை விடுத்தவர்கள் கையாலேயே திறந்து வைக்கும் அமைச்சர், அவரது சொந்த தொகுதி உள்ள மாவட்டத்தை கவனிக்க தவறிவிட்டதாக தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அதிகம் தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்புகளும் இல்லாத பெரம்பலூர் மாவட்ட மக்கள், பெரும்பாலும் வேலைக்காக திருச்சியையும் சென்னையையும் நம்பியே உள்ளனர். அப்படி இருக்கும் சமயத்தில், பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டிற்கும் கோரிக்கைக்கும் செவிகொடுக்க தவறிவிட்டார்.

மக்கள் அவதி

கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஒரே ஒரு பேருந்து பெரம்பலூரில் இருந்து நேரடியாக சென்னைக்கு விடப்பட்டது. அதுவும் தற்போது மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், மக்கள் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளை தான் மொத்தமாக நம்பி இருக்கும் சூழல் நிலவுகிறது.

மின்சாரத் துறை அமைச்சர் பொறுப்பு

இந்த நிலையில், தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறை வழங்கப்பட்டுள்ளது. இதை அவர் எப்படி கையாளப் போகிறார் என்ற கேள்வியும் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. காரணம், திமுக ஆட்சியில் கோடை காலம் வந்தாலே மின்தடை ஏற்படும் என்ற பேச்சு அடிபடத் தொடங்கிவிடும்.

அதற்கு தகுந்தாற்போல, கடந்த வாரம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தொடர் மின்தைடையை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வி செந்தில் பாலாஜியை குறிவைத்து வைக்கப்பட்ட போதிலும், மின்தடை பிரச்சனை மக்களுக்கானது.

எதிர்கொள்ளப் போகும் சவால்கள்

அத்தோடு, புதிதாக வீடு கட்டுவோர், அல்லது மீட்டர் பெட்டியை மாற்றுவதற்காக விண்ணப்பம் அளித்தோர் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. தமிழ்நாட்டில், மீட்டர் பெட்டிகள் பற்றாக்குறை, மின் பராமரிப்பு பணிகள், விவசாயம், நெசவுத் தொழில்களில் வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் போன்றவை அவர் முன் நிற்கும் சவால்களாக உள்ளது. அவற்றை நாளை மின்சாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ள சிவசங்கர் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.