’ஈரோடு இடைத்தேர்தலா? ஊரக உள்ளாட்சித் தேர்தலா?’ எதை விடுவது; எதை தொடுவது! கன்பியூஷனில் விஜய்!
ஏற்கெனவே நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர். இந்த நிலையில் இந்த இரண்டு தேர்தல்களில் எதில் போட்டியிடலாம் என்பது குறித்து தவெக தரப்பில் யோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்த நிலையில் அடுத்து வரும் இடைத்தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குவது குறித்து ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி நிலவரம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மரணம்
வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்றைய தினம் காலமானார். அவருக்கு இன்றைய தினம் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
ஒரு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ இறந்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாக உள்ளது. இளங்கோவன், மறைவால் தற்போது காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து தவெக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கெனவே நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர். இந்த நிலையில் இந்த இரண்டு தேர்தல்களில் எதில் போட்டியிடலாம் என்பது குறித்து தவெக தரப்பில் யோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒப்பிடும் போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதிலேயே நடிகர் விஜய்க்கு அதிக ஆர்வம் உள்ளதாக கூறப்படுகின்றது.