HBD Pazha Nedumaran: எளிமை, போராட்ட அரசியலில் சிகரம் தொட்ட பழ.நெடுமாறன் என்னும் ஆளுமை!-special article on the 91st birthday of veteran tamil national politician pazha nedumaran - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Pazha Nedumaran: எளிமை, போராட்ட அரசியலில் சிகரம் தொட்ட பழ.நெடுமாறன் என்னும் ஆளுமை!

HBD Pazha Nedumaran: எளிமை, போராட்ட அரசியலில் சிகரம் தொட்ட பழ.நெடுமாறன் என்னும் ஆளுமை!

Marimuthu M HT Tamil
Mar 10, 2024 10:58 AM IST

Pazha Nedumaran: போராட்ட அரசியலில் சிகரம் தொட்ட மூத்த அரசியல்வாதி பழ.நெடுமாறன் ஐயா,இன்று தனது 91ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

HBD Pazha Nedumaran: எளிமை, போராட்ட அரசியலில் சிகரம் தொட்ட பழ.நெடுமாறன் என்னும் ஆளுமை!
HBD Pazha Nedumaran: எளிமை, போராட்ட அரசியலில் சிகரம் தொட்ட பழ.நெடுமாறன் என்னும் ஆளுமை!

அரசியல் கடுமையான பாதை கொண்ட சாலையாகும். இதில் பயணம் செய்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவரின் பிறப்பு எப்படி இருந்தாலும் அவருடைய வாழ்வின் பயணத்தில் செய்த சாதனைகளைப் பொறுத்தே வரலாறு எழுதப்படும். போராட்ட அரசியலை கையில் எடுத்து வாழும் பழ.நெடுமாறனின் கதை பலரை ஆச்சரியப்படுத்துகிறது. 

யார் இந்த பழ.நெடுமாறன்?: 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள், பழ.நெடுமாறன் மதுரை மாநகரில் பழனியப்பனார் மற்றும் பிரமு அம்மைக்கு மகனாகப் பிறந்தார். பழ.நெடுமாறனுடன் இரண்டு அக்காக்களும், மூன்று தம்பிகளும் உடன்பிறந்துள்ளனர். பழ.நெடுமாறனின் தந்தை, ஒரு தமிழ் ஆர்வலர். 1942ல் மதுரையில் முத்தமிழ் மாநாடு, 1956ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா போன்ற பெரும்மாநாடுகளை திறம்படநடத்திக் காட்டியவர். அதனால், அவரது சிறுவயது முதலே பழ.நெடுமாறனும் சிறந்த தமிழ்ப்பற்றாளராகத் திகழ்ந்தார்.

பள்ளிப் படிப்பை மதுரையில் படித்த பழ.நெடுமாறன், கல்லூரிப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியத்தில் படித்து சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றார்.

தனது கல்லூரியில் மாணவர் பருவத்திலேயே மாணவர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு 1958ஆம் ஆண்டு சிறை சென்ற பழ. நெடுமாறன், பேரறிஞர் அண்ணாதுரைக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் பெரும்போராட்டத்தை நடத்தி, அவரை அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தி, ரூ. 10ஆயிரம் நிதி திரட்டி, அவரது பத்திரிகைக்கு கொடுத்தார்.

ஆரம்பத்தில் காந்தி, காமராஜர் மீது கொண்ட பற்றின் காரணமாக, இந்திய தேசிய காங்கிரஸில் பணியாற்றிய பழ.நெடுமாறன், மதுரையில் இந்திரா காந்தி தாக்கப்பட்டபோது அவரை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார். அதனால், அவரால் தனது மகன் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

இதனால், பழ.நெடுமாறனை காமராஜர் மாவீரன் என அழைத்தார். பின் காங்கிரஸ் கட்சியில் நடந்த சில ஜீரணிக்கமுடியாத விஷங்களால் வெறுப்புக்குள்ளான பழ.நெடுமாறன் அக்கட்சியில் இருந்து விலகினார். 1979ஆம் ஆண்டு முதல் தமிழர் தேசிய இயக்கத்தை தோற்றுவித்து, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.

தமிழ்த்தேசிய அரசியலில் நிலைத்து நின்றவர்: 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு.

மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன். 

தமிழ் ஈழத்தின் சிக்கல்கள் குறித்து தொடக்கத்திலிருந்து அறிந்தவர் இவர். உயிரிழந்ததாக கூறப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இன்னும் உயிருடன் இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை கடந்தாண்டை வெளியிட்டார்.

மேலும், வேலுப்பிள்ளை பிரபாகரன் மூத்த தளபதிகளின் வற்புறுத்தலால் இலங்கையை விட்டு வெளியேறினார் என்றே கூறி வருகிறார்.

கன்னட சூப்பர் ஸ்டாரை மீட்க உதவிய பழ.நெடுமாறன்:2000ஆம் ஆண்டு, வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக்கோரும் குழுவுக்கு தலைமை தாங்கி காட்டுக்குள் சென்று அவரிடம் பேச்சுவார்த்தை செய்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டார். பழ.நெடுமாறனின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்ட வீரப்பன், தனது ஆக்ரோஷத்தைக் குறைத்து ராஜ்குமாரை விடுவித்தார். 

போராட்டத்துடன் தொடங்கிய இவரது வாழ்க்கை, தமிழ்ப் பற்றாளர், தமிழீழ போராளி, பத்திரிக்கையாளர், புத்தக எழுத்தாளர், அரசியல்வாதி, சிறைக்கைதி என பரிமாணங்கள் பெற்றது. இவரது பயணத்தை ஒரு தொகுப்பில் அடக்கி விட முடியாது. 

போராட்டக் களத்தில் இருக்கும்  இதுபோன்ற தலைவர்களைப் பார்ப்பது அரிதினும் அரிது. இன்று தனது 91ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் பழ.நெடுமாறனை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.