NDA Alliance: ஓபிஎஸ்-டிடிவி தினகரனுக்கு பாஜக தலைமை அழைப்பு? - நாளை மறுநாள் இருவரும் டெல்லி பயணம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nda Alliance: ஓபிஎஸ்-டிடிவி தினகரனுக்கு பாஜக தலைமை அழைப்பு? - நாளை மறுநாள் இருவரும் டெல்லி பயணம்!

NDA Alliance: ஓபிஎஸ்-டிடிவி தினகரனுக்கு பாஜக தலைமை அழைப்பு? - நாளை மறுநாள் இருவரும் டெல்லி பயணம்!

Kathiravan V HT Tamil
Oct 02, 2023 04:06 PM IST

“இருவரும் நாளை மறுதினம் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிற பாஜக முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது”

ஓ.பன்னீர் செல்வம்  - டிடிவி தினகரன் - ஜே.பி,நட்டா
ஓ.பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் - ஜே.பி,நட்டா

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர் பாஜகவில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்வதாக அதிமுக அறிவித்தது. இந்த முடிவு பாஜக மாநிலத் தலைமையின் செயல்பாடுகள் காரணமாக எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி பிளவு குறித்து மாநில பாஜக தரப்பில் இருந்து யாரும் கருத்து சொல்லக் கூடாது என டெல்லி மேலிடம் உத்தரவிட்டு இருந்தது. தமிழ்நாட்டின் அரசியல் கள நிலவரம் குறித்தும், பாஜக-அதிமுக கூட்டணி பிளவு குறித்தும் பாஜக தலைமை அண்ணாமலையிடம் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் நேற்று டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை பாஜக தேசியத் தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி இருவரும் நாளை மறுதினம் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிற பாஜக முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வரவிருகும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லது காங்கிரஸ் ஆகிய ஏதேனும் ஒரு தேசியக் கட்சிகளுடன் அமமுக கூட்டணி அமைக்கும் என ஏற்கெனவே அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி இருந்தார். பாஜக மேலிடத்தில் இருந்து மூன்று மாத காலமாக பேசி வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இருவரின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.