TTF Vasan: தனது பாம்பை கையில் பிடித்தபடி TTF வாசன் போட்ட வீடியோ! தட்டி தூக்கிய வனத்துறை!
TTF Vasan: அந்த பாம்புக்கு ’பப்பி’ என பெயரிட்டுள்ளதாக கூறும் டிடிஎஃப் வாசன், இதனை மகராஷ்டிராவில் உள்ள காட்டில் இருந்து கொண்டு வந்ததாக கூறி உள்ளார்.
![TTF Vasan: தனது பாம்பை கையில் பிடித்தபடி TTF வாசன் போட்ட வீடியோ! தட்டி தூக்கிய வனத்துறை! TTF Vasan: தனது பாம்பை கையில் பிடித்தபடி TTF வாசன் போட்ட வீடியோ! தட்டி தூக்கிய வனத்துறை!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/30/550x309/TTF_VASAN_SNACK_1735535824205_1735535830310.png)
தனது கையில் பாம்பை சுற்றியபடி வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பாம்புக்கு ’பப்பி’ என பெயரிட்டுள்ளதாக கூறும் டிடிஎஃப் வாசன், இதனை மகராஷ்டிராவில் உள்ள காட்டில் இருந்து கொண்டு வந்ததாக கூறி உள்ளார். இரண்டு வயது ஆகப்போகும் அந்த பாம்பிற்கு, தாயாகவும், தந்தையாகவும் தானே உள்ளதாக டிடிஎஃப் வாசன் கூறி உள்ளார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் வனத்துறை அதிகாரிகள் டிடிஎஃப் வாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்ச்சை மன்னன் டிடிஎஃப் வாசன்
கோயம்புதூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபலமான யூடியூபரான TTF வாசன். பைக் ரேஸ் சார்ந்த வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலம் ஆனவர் ஆவார். கவனக்குறைவான வாகனம் ஓட்டுதல் மற்றும் ஆபத்தான ஸ்டண்ட் காரணமாக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பொது விமர்சனங்களுக்கு அவர் ஆளானார்.
அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்
கடந்த மே மாதத்தில் வாசன் மதுரை காவல்துறையினரால் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், வாகனம் ஓட்டும்போது மொபைல் போனைப் பயன்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2023ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய ஆபத்தான பைக் ஸ்டண்ட் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அவரது ஓட்டுநர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி கோயிலில் குறும்பு வீடியோ
ஜூலை 2024 இல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) வழிபாட்டுக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுவது போல் வாசன் வெளியிட்ட வீடியோ விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. அந்த வீடியோவில், வாசனும், அவரது நண்பர்களும், தேவஸ்தான ஊழியர்கள் போல் நடித்து, தரிசன வரிசை திறக்கப்படுவதாக நினைத்து பக்தர்களை தவறாக வழிநடத்தியது, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பக்தர்களை அவமரியாதை செய்ததற்காக இந்த செயல் பரவலாகக் கண்டிக்கப்பட்டது, மேலும் இதுபோன்ற குறும்பு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று TTD அதிகாரிகள் எச்சரித்தனர்.
மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து நீக்கம்
'மஞ்சள் வீரன்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாசன் ஒப்பந்தம் ஆகி இருந்த நிலையில், தொடர் சர்ச்சைகளால் அப்படத்தில் இருந்து வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் அறிவித்தார். இந்த செயலுக்கு வாசன் இயக்குனரை பகிரங்கமாக விமர்சித்தார்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)