PMK: ஆக்டீவ் அரசியலில் குதித்த சௌமியா அன்புமணி! ராமதாஸ் அதிருப்தி? பாமகவில் அடுத்த களேபரம்! நடப்பது என்ன?
கடந்த சில நாட்களாக ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து உள்ள நிலையில் அன்புமணிக்கு ஆதரவாக நேரடி கள அரசியல் செயல்பாடுகளை சௌமியா அன்புமணி தீவிரப்படுத்தி உள்ளார்.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி மாவட்டம் தோறும் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மருத்துவர் ராமதாஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
சௌமியா அன்புமணியும் தருமபுரி தேர்தலும்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக மருத்துவர் ராமதாஸும், அக்கட்சியின் தலைவராக அவரது மகன் அன்புமணி ராமதாஸும் இருந்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் சௌமியா அன்புமணி நேரடியாக அரசியல் களத்தில் குதித்தார். திமுக வெட்பாளர் மணியிடம் சிறு வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவர் வெற்றி வாய்ப்பை இழந்து இருந்தார்.
கூட்டணி வைப்பதில் கருத்து முரண்!
அத்தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைக்க ராமதாஸும், பாஜக உடன் கூட்டணி வைக்க அன்புமணியும் ஆர்வம் காட்டியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. பாஜக உடன் பாமக கூட்டணி வைத்த நிலையில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது.
இதுவரை எந்த கட்சி பொறுப்பும் இல்லை
சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சௌமியா அன்புமணி பசுமை தாயகம் எனும் சுற்றுசூழல் அமைப்பின் தலைவராகவும், பசுமைத் தாயகம் சுற்றுசூழல் இதழின் ஆசிரியர் மற்றும் மக்கள் தொலைக்காட்சியின் ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளார். இருப்பினும் இவருக்கு இதுவரை பாமகவில் நேரடியாக எந்த கட்சி பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.
பாமக பொதுக்குழுவில் அதிருப்தி
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் முகுந்தன் பரசுராமன் என்பவரை பாமக இளைஞரணித் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். இவர் மருத்துவர் ராமதாஸின் மூத்த மகள் வழிப்பேரன் ஆவார். இந்த அறிவிப்புக்கு மேடையிலேயே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். ”கட்சில 4 மாசத்திற்கு முன்னாடி வந்து இருக்கான். அவனுக்கு இளைஞர் சங்கம் என்றால் என்ன அனுபவம் உள்ளது?, வேறு யாராவது அனுபவசாலிகளை கொடுங்கள்” என அன்புமணி கூறினார்.
அன்புமணியின் இந்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய மருத்துவர் ராமதாஸ், “நான் சொல்றதுதான் யாரா இருந்தாலும் கேக்கனும். நான் சொல்றத கேக்கலனா, யாரும் இந்த கட்சில இருக்க முடியாது. இது நான் உண்டாக்குன கட்சி. நான் சொல்றத கேக்கடலனா யாரும் இந்த கட்சில இருக்க முடியாது” என கூறினார். இந்த சம்பவம் ஊடகங்களில் பெரும் பேசுபொருள் ஆனது.
இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸை அன்புமணி நேரில் சென்று சந்தித்தார். ஆனாலும் அன்புமணியின் செயல்பாடுகள் மீது மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்து வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் சௌமியா அன்புமணி!
இந்த நிலையில் சௌமியா அன்புமணி மாவட்டம் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மேலும் கட்சிக் கொடியேற்று விழாக்களிலும் அவர் பங்கேற்று வருகிறார்.
இன்றைய தினம் சேலம் தெற்கு மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்கணசாலை - கே.கே.நகர், இ.காட்டூர் பகுதிகளில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் கொடியேற்றி சௌமியா அன்புமணி பொதுமக்களை சந்தித்தார்.
அதே போல் பசுமைத் தாயகம் சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார். பாமக நிர்வாகிகள் இல்ல சுபநிகழ்ச்சிகளிலும் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். சௌமியா அன்புமணியின் செயல்பாடுகள் மருத்துவர் ராமதாஸ்க்கு அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
