Sivakasi: மறைந்துபோன மனைவிக்கு ரூ.9 லட்சம் செலவில் சிலிக்கான் சிலை வைத்த கணவர் - நினைவு நாளில் நெகிழ்ச்சி!
உயிரிழந்த மனைவியின் நினைவாக சிலிக்கான் சிலையை வடிவமைத்து நினைவு தினத்தை அனுசரித்த சிவகாசி தொழிலதிபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். 70 வயதான இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இவரது மனைவி ஈஸ்வரி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் காலமானார். மனைவி மீது தீராத அன்பு கொண்டுள்ள நாராயணன், அவர் இறந்த பிறகும் அவரது நினைவாகவே வாழ்ந்து வந்துள்ளார். இவரது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், இவர் மட்டும் தனிமையில் தனது மனைவி நினைவாக இருந்துள்ளார்.
மனைவி இறந்த சம்பவம் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே முதல்கட்டமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகில் உள்ள சுவாமி மலையில் 2 லட்ச ரூபாய் மதிப்பில் தனது மனைவியின் மார்பளவு வெண்கல சிலையை வடிவமைத்து வாங்கி வந்து வீட்டின் வாசல் முன்பு அமைத்து காவல் தெய்வமாக வழிபட்டு வருகிறார். மேலும், சிலிக்கான் சிலையை செய்தால் தன்னுடனே வீட்டுக்குள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அதனை செய்ய எண்ணியுள்ளார்.
அதன்படி, பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒரு வருடத்திற்கு முன்பாக ஆர்டர் கொடுக்கப்பட்டு சிலிக்கான் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது மனைவியின் நினைவு நாளுக்கு முன்பாகவே அதனை செய்ய கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று (மே 25) அவரது நினைவு நாளை அவரது வீட்டில் சிலையை வைத்து அனுசரித்து நினைவு கூர்ந்தார்.
இந்த சிலை தத்ரூபமாக அவரது மனைவி ஈஸ்வரியின் உண்மையான உருவம் போல அமைந்துள்ளது. மனைவியின் நினைவு தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக 9 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலையை செய்துள்ளதாகவும், அவர் உயிருடன் இருப்பது போன்ற மன நிறைவு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.