Ramajayam murder case: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு இன்று தாக்கல் செய்தது.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்ற போது கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். திருச்சி கல்லணை சாலையில் கிடந்த உடலை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்தும் போலீசாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்
பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சென்னை சி.பி.ஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது.
எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் கொலை வழக்கு தொடர்பாக 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி உள்ளனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று (நவ.21) தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டாபிக்ஸ்