Kalakshetra Instructor Arrested: பாலியல் துன்புறுத்தல் புகார்: கலாக்ஷேத்ராவின் முன்னாள் பயிற்றுநர் ஒருவர் புதிதாக கைது
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kalakshetra Instructor Arrested: பாலியல் துன்புறுத்தல் புகார்: கலாக்ஷேத்ராவின் முன்னாள் பயிற்றுநர் ஒருவர் புதிதாக கைது

Kalakshetra Instructor Arrested: பாலியல் துன்புறுத்தல் புகார்: கலாக்ஷேத்ராவின் முன்னாள் பயிற்றுநர் ஒருவர் புதிதாக கைது

Marimuthu M HT Tamil
Apr 24, 2024 07:09 AM IST

Kalakshetra Instructor Arrested: பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில், கலாக்ஷேத்ராவின் முன்னாள் பயிற்றுநர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் புகார்: மீண்டும் கலாக்ஷேத்ராவின் முன்னாள் பயிற்றுநர் ஒருவர் கைது
பாலியல் துன்புறுத்தல் புகார்: மீண்டும் கலாக்ஷேத்ராவின் முன்னாள் பயிற்றுநர் ஒருவர் கைது

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, இந்திய கலைகளான பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளைப் பாதுகாக்க சென்னையில் 1936 முதல் செயல்பட்டு வரும் அகாடமி ஆகும்.

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் பயிற்றுநரும் பரதநாட்டிய நடனக் கலைஞருமான ஸ்ரீஜித் கிருஷ்ணாவை, அவரது முன்னாள் மாணவிகள் இருவர் செய்த புகாரின் அடிப்படையில், தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீஜித் கிருஷ்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக இரு முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நீலாங்கரை காவல் துறை அலுவலர்கள் தெரிவித்ததாவது, "அவர்கள் 1995-2007 காலகட்டத்தில் அறக்கட்டளையின் மாணவிகள். பிப்ரவரியில் நாங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தோம்.

51 வயதான ஸ்ரீஜித் கிருஷ்ணா ஏப்ரல் 22 அன்று கைது செய்யப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் மற்றும் அதே நாளில், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்," என்று காவல்துறை அலுவலர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு நடந்த போராட்டம்:

கடந்த ஆண்டு, நான்கு ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அகாடமியில் படிக்கும் மாணவிகள் நடத்திய போராட்டத்தினை அடுத்து, இந்த கலை நிறுவனம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. கலாக்ஷேத்ரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி மாணவவிகளால் முதலில் குற்றம் சாட்டப்பட்டவர், உதவிப்பேராசிரியரான ஹரி பத்மன். முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஹரி பத்மனை சென்னை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம் முதல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கலாக்ஷேத்ரா இன்ஸ்டிடியூட் நிர்வாகக் குழு, ஹரி பத்மனை இடைநீக்கம் செய்தது. மேலும், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய மூன்று பயிற்றுநர்களையும் பணிநீக்கம் செய்தது.

கடந்த ஆண்டு, ஏப்ரலில் 7 மாணவிகள் தங்களின் அடையாளத்தைப் பாதுகாக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் பாதுகாப்பான கற்றல் சூழலையும், வளாகத்தில் புகார்களைக் கையாள்வதற்கான தீர்வு வழிமுறையையும் நாடியிருந்தனர்.

உள் புகார்கள் குழுவின் செயல்பாடுகள்:

கடந்த ஏப்ரல் 3, 2023 அன்று அமைக்கப்பட்ட உள் புகார்கள் குழுவில் (ஐசிசி) உறுப்பினர்களின் சுயவிவரங்களை சமர்ப்பிக்குமாறு கலாக்ஷேத்ரா அறக்கட்டளைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய புதிய கொள்கையை உருவாக்கி, பின்னர் உள் புகார்கள் குழுவை மறுசீரமைக்க நீதிமன்றம் விரும்பியது.

கடந்த ஆகஸ்டில், கலாக்ஷேத்ரா அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணைக் குழுவின் அறிக்கை ஹரி பத்மனை"குற்றவாளி" என்று விவரித்தது. அவருக்கு எதிராக "பெரிய தண்டனை"யை பரிந்துரைத்தது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே. கண்ணன் தலைமையில், தமிழக முன்னாள் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் மற்றும் மருத்துவ நிபுணருமான ஷோபா வர்த்தமான்,  ஆகியோரைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

இந்தக் குழுவை,  கலாக்ஷேத்ராவின் தலைவர் எஸ். ராமதுரை, உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி அமைத்தார். கலாக்ஷேத்ரா கல்வி நிறுவன நிர்வாகம் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், சுதந்திரமான விசாரணையை விரும்பும் மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்க இந்தக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஹரி பத்மனின் கைது என்கிற முடிவினை, கலாக்ஷேத்ரா வாரியம் ஆரம்பம் முதல் மறுத்தது. இருந்தாலும், தமிழக அரசின் விசாரணை காரணமாக, பல வாரங்கள் மறுப்புக்குப் பிறகு ஹரி பத்மனின் கைது நடவடிக்கை நடந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி கலாக்ஷேத்ரா நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் உள் புகார்கள் குழு விசாரித்ததில், மாணவ-மாணவிகளின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்று கூறியது.

கடந்த 2023ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் தேதி கலாக்ஷேத்ரா மாணவிகள், முன்னாள் மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்த ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பயிற்றுநர்கள் பணி இடைநீக்கம் செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.