Annamalai vs Senthilbalaji: ’செந்தில் பாலாஜி ராஜினாமா பாஜகவுக்கு கிடைத்த வெற்றி!’ அண்ணாமலை!
“செந்தில் பாலாஜியை வெளியில் கொண்டுவருவதற்காக இன்னும் ஒரு வாரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பியை சரண்டர் செய்வார்கள் என நான் பார்க்கிறேன். தேர்தல் வருவதால் அவரை வைத்து சில வேலைகளை பார்க்கலாம் என அவர்கள் திட்டமிடுகிறார்கள்”

வடசென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக தொண்டனை விட மோசமானவராக சபாநாயகர் அப்பாவு உள்ளார். தமிழ்நாட்டில் சாதி வந்ததற்கு காரணமே அதற்கு கருணாநிதிதான் என அவரோ சொன்னார். ஆளுநர் அவரின் கருத்தை வெளிப்படுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்திருக்கிறார். சபாநாயகர் கட்சி சார்ந்து பேசுகிறார். திமுக உறுப்பினரை போல பேசியதால் ஆளுநர் எழுந்து சென்றுள்ளார்.
ஆளுநருக்காக எழுதிக்கொடுக்கப்பட்ட உரையில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் இடம்பெற்று இருந்தது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டுக்கு மிக குறைந்த தொகையே கிடைத்தது. தமிழ்நாடு முதலீட்டாளர்கள் முகவரியாக இல்லை.
மழையை கையாண்டதற்காக ஆளும்கட்சிக்கு பாராட்டு என ஆளுநர் உரையில் எழுதி உள்ளனர். பொய்யை எழுதி சென்னை வெள்ளத்தை கையாண்டதை பாராட்டுங்கள் என்றால் எப்படி பாராட்டுவார்கள். முதலமைச்சரின் சுயபுராணத்தை பாட நேற்று ஆளுநர் உரையில் எழுதி உள்ளனர்.
நாதுராம் கோட்சேவுக்கும் கவர்னருக்கும் தொடர்பு இல்லை. பாஜகவுக்கு நாதுராம் கோட்சேவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆளுநர் என்பவர் திமுக உறுப்பினர் கிடையாது.
அரசு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடனும், தேசிய கீதத்துடனும் தொடங்க வேண்டும், முடியும்போது தேசிய கீதத்துடன் முடிய வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல் நாளில் இருந்து சொல்லி வருகிறோம். அமைச்சருக்கு செய்யும் வேலைக்காக சம்பளம் தருகிறோம். ஊழல் வழக்கில் கைதான ஒரு அமைச்சருக்கு மக்கள் வரிபணத்தில் சம்பளம் கொடுத்து இலாகா இல்லாத அமைச்சராக 8 மாதமாக வைத்து இருக்கிறார்கள்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்குமா என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின் ஜாமீன் குறித்து விவாதிக்கலாம் என நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. செந்தில் பாலாஜி ஊழல் வாதி என்பதிலே யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. செந்தில் பாலாஜி ராஜினாமாவை பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.
செந்தில் பாலாஜியை வெளியில் கொண்டுவருவதற்காக இன்னும் ஒரு வாரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பியை சரண்டர் செய்வார்கள் என நான் பார்க்கிறேன். தேர்தல் வருவதால் அவரை வைத்து சில வேலைகளை பார்க்கலாம் என அவர்கள் திட்டமிடுகிறார்கள்.
