தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Senthil Balaji's Bail Plea Dismissed By Sessions Court

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி.. சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு!

Karthikeyan S HT Tamil
Jan 12, 2024 05:36 PM IST

Minister Senthil Balaji Case: அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை 3வது முறையாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அமைச்சா் செந்தில் பாலாஜி
அமைச்சா் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை தரப்பில், பதில்மனு தாக்கல் செய்யபட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கபட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு (டிச.09) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு, சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. எனவே, சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.அல்லி வழக்கின் தீர்ப்பு ஜனவரி 12-ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை 3-வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்