Senthil Balaji: ஒரு வழியா முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கிடைத்தது ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி.. வழக்கு பின்னணி
Senthil Balaji : பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Senthil Balaji : பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைதொடர்ந்து ஓராண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை
கைதான சில நாட்களில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறையில் இருந்தபடியே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.