ADMK-BJP alliance: ’புத்தி இருக்கவன் இதை பண்ணுவானா? இனி அவ்ளோதான்!’ ஈபிஎஸ் முடிவை சாடும் எஸ்.பி.லட்சுமணன்!
"புத்தியுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு இப்படி கூட்டணியை அறிவிக்காது. இதனால் அதிமுக தொண்டர்கள் புழுங்கி புழுங்கி சாவார்கள்" என்று கடுமையாகக் கூறினார். அவர் மேலும், "பாஜகவின் தவறுகளுக்கு அதிமுகவே விளக்கம் சொல்ல வேண்டிய நிலை வரும். இது அதிமுகவுக்கு எந்தப் பயனையும் தராது"

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு அதிமுகவை பலவீனப்படுத்தும் என மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தனியார் யூடியூப் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில், இந்த முடிவு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைப் பண்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது சமீபத்திய நேர்காணலில், இந்தக் கூட்டணியின் அறிவிப்பு, அதன் நேரம், மற்றும் அதிமுக தொண்டர்களின் மனநிலை குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.
கூட்டணி அறிவிப்பு: அவசரமும் குழப்பமும்
எஸ்.பி.லட்சுமணன், அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு ஒரு வருடத்துக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதை விமர்சித்தார். "புத்தியுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு இப்படி கூட்டணியை அறிவிக்காது. இதனால் அதிமுக தொண்டர்கள் புழுங்கி புழுங்கி சாவார்கள்" என்று கடுமையாகக் கூறினார். அவர் மேலும், "பாஜகவின் தவறுகளுக்கு அதிமுகவே விளக்கம் சொல்ல வேண்டிய நிலை வரும். இது அதிமுகவுக்கு எந்தப் பயனையும் தராது" என்று வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமி ஆளுமையை இழந்துவிட்டார்
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தைகளை யாரும் நம்பவில்லை என்றும், அவரது மறைமுக ட்வீட் மட்டுமே கூட்டணியை உறுதிப்படுத்தியதாகவும் லட்சுமணன் சுட்டிக்காட்டினார். "எடப்பாடி தனது ஆளுமைப் பண்பை இழந்துவிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தலைமையில் இயங்கும் என்று அறிவிக்க வேண்டியவர் எடப்பாடிதான். ஆனால், அமித் ஷாவே அறிவித்தார். இது அதிமுகவுக்கு மரியாதைக் குறைவு" என்று அவர் குற்றம்சாட்டினார்.
அமித் ஷாவின் அறிவிப்பும் அதிமுகவின் மவுனமும்
கூட்டணி அறிவிப்பு நிகழ்வில் எடப்பாடியின் மவுனத்தை விமர்சித்த லட்சுமணன், "அமித் ஷா ‘கூட்டணி ஆட்சி’ என்று பேசியபோது, எடப்பாடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ‘ஆமாம்’ என்று இரண்டு வார்த்தைகளாவது சொல்லியிருக்க வேண்டும்" என்றார். மேலும், அமித் ஷாவின் கருத்துக்கு உடன்பாடு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஒரு ட்வீட்டிலாவது தெரிவித்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "மக்களும் அதிமுக தொண்டர்களும் முட்டாள்கள் அல்ல. இந்த முடிவு அதிமுகவை பலவீனப்படுத்தும்" என்று அவர் எச்சரித்தார்.
அமித் ஷாவின் வருகையின்போது, குருமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று பின்னர் ஹோட்டலில் அறிவிப்பு செய்யப்பட்டது அதிமுகவுக்கு மரியாதைக் குறைவாக இருந்ததாக லட்சுமணன் கருதுகிறார். "எடப்பாடியின் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்து, பின்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால், அதிமுக தலைமையின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும்" என்று அவர் கூறினார்.
அண்ணாமலை விவகாரம்: சாணக்கியத்தனமா ?
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதை எடப்பாடியின் “சாணக்கியத்தனம்” என்று சிலர் கருதினாலும், லட்சுமணன் இதை ஏற்கவில்லை. "அண்ணாமலை ‘ஊழல்வாதி ஜெயலலிதா’ என்று பேசியவர். அவருக்கு எதற்கு விருந்து கொடுக்க வேண்டும்? இது எப்படி சாணக்கியத்தனமாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். அண்ணாமலையின் பொய்யான பேச்சுகள் பொதுமக்களிடம் செல்வாக்கை இழந்ததாகவும், பாஜக மேலிடம் அவரை நீக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், 2024 தேரதலில் அதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றியது அண்ணாமலையின் தவறான உத்தி என்று லட்சுமணன் விமர்சித்தார். "அண்ணாமலையின் உத்தி தோல்வியடைந்தது. ஒரு எம்பி கூட வெற்றி பெறவில்லை. இதனால் பாஜக மேலிடம் அவரை நீக்கியது" என்று அவர் தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி: தமிழ்நாட்டுக்கு ஏற்புடையதா?
அமித் ஷா “கூட்டணி ஆட்சி” என்று குறிப்பிட்டது தமிழ்நாட்டு அரசியலுக்கு பொருந்தாது என்று லட்சுமணன் வாதிட்டார். "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தை மக்களால் ஏற்கப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு கூட்டணி ஆட்சி பேசிய எந்தக் கூட்டணியும் வெற்றி பெற்றதில்லை" என்று அவர் கூறினார். 1980களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்ததையும், எம்ஜிஆர் தனித்து வெற்றி பெற்றதையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
அதிமுகவின் பலவீனங்கள்
எடப்பாடியின் முடிவு அதிமுகவை பலவீனப்படுத்துவதாக லட்சுமணன் எச்சரித்தார். "ஓபிஎஸ், டிடிவி தினகரனை ஒதுக்கியது சாணக்கியத்தனமாக இருக்கலாம். ஆனால், அவர்களின் செல்வாக்கு இல்லாமல் தென் மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் வெற்றி பெறுவது கடினம்" என்று அவர் கூறினார். மேலும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல், வேலுமணி மற்றும் முனுசாமி போன்ற சிலரை மட்டுமே நம்பியது கட்சியை பலவீனப்படுத்துவதாக விமர்சித்தார்.
தொண்டர்களின் மனநிலை
அதிமுக தொண்டர்களிடையே உற்சாகம் இல்லை என்று லட்சுமணன் கவலை தெரிவித்தார். "ஒரு கூட்டணி அமைந்தால் உற்சாகம் பொங்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பு தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது. அவர்கள் மனதுக்குள் குமுறுவார்கள்" என்று கூறினார். எடப்பாடியின் உடல் மொழியும் மகிழ்ச்சியாக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். "எடப்பாடி கட்டாயப்படுத்தப்பட்டு இந்தக் கூட்டணிக்கு இழுக்கப்பட்டார். இது அவருக்கு அவமானத்தையும், கட்சிக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தும்" என்று அவர் எச்சரித்தார்.
பாஜகவுக்கு லாபம், அதிமுகவுக்கு நஷ்டம்
இந்தக் கூட்டணியால் பாஜகவுக்கு பயன் இருந்தாலும், அதிமுகவுக்கு எந்தப் பலனும் இல்லை என்று லட்சுமணன் தெரிவித்து உள்ளார். "பாஜகவுக்கு அதிமுகவின் வாக்கு வங்கி தேவை. ஆனால், அதிமுகவுக்கு பாஜகவால் எந்த லாபமும் இல்லை. 2-3% வாக்குகள் மட்டுமே பாஜகவால் கிடைக்கும்" என்று அவர் கூறினார். மேலும், வக்பு மசோதா போன்ற பாஜகவின் முடிவுகளுக்கு அதிமுக விளக்கம் அளிக்க வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்தார்.
2026 தேர்தல்: அதிமுகவின் எதிர்காலம்
2026 சட்டமன்றத் தேரதலில் திமுகவை வீழ்த்த அதிமுகவுக்கு வலுவான கூட்டணி தேவை என்று லட்சுமணன் வலியுறுத்தினார். ஆனால், தற்போதைய கூட்டணி அறிவிப்பு அதிமுகவை பலவீனப்படுத்துவதாகவே உள்ளது என்று அவர் கவலை தெரிவித்தார். "பாமக, ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களை உள்ளடக்கிய வலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த அவசர அறிவிப்பு எதிரிகளுக்கு வாய்ப்பை அளித்துவிட்டது" என்று அவர் கூறினார்.

டாபிக்ஸ்