’பொன்முடியின் கட்சி பதவியை நீக்கி என்ன பிரயோஜனம்! யார் காதுல பூ சுத்துரிங்க!’ ஸ்டாலினை விளாசிய பத்திரிக்கையாளர் மணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’பொன்முடியின் கட்சி பதவியை நீக்கி என்ன பிரயோஜனம்! யார் காதுல பூ சுத்துரிங்க!’ ஸ்டாலினை விளாசிய பத்திரிக்கையாளர் மணி!

’பொன்முடியின் கட்சி பதவியை நீக்கி என்ன பிரயோஜனம்! யார் காதுல பூ சுத்துரிங்க!’ ஸ்டாலினை விளாசிய பத்திரிக்கையாளர் மணி!

Kathiravan V HT Tamil
Published Apr 14, 2025 05:40 PM IST

“பொன்முடியின் பேச்சு பெண்களுக்கு எதிரானது மட்டுமல்ல, மத உணர்வுகளையும் புண்படுத்தியது. இதற்கு மகளிர் அமைப்புகள் தெருவில் இறங்கி போராடியிருக்க வேண்டும். ஆனால், திராவிடர் கழகமோ, கூட்டணி கட்சிகளோ இதை கண்டிக்கவில்லை”

’பொன்முடியின் கட்சி பதவியை நீக்கி என்ன பிரயோஜனம்! யார் காதுல பூ சுத்துரிங்க!’ ஸ்டாலினை விளாசிய பத்திரிக்கையாளர் மணி!
’பொன்முடியின் கட்சி பதவியை நீக்கி என்ன பிரயோஜனம்! யார் காதுல பூ சுத்துரிங்க!’ ஸ்டாலினை விளாசிய பத்திரிக்கையாளர் மணி!

சைவ, வைணவ சமய குறியீடுகளை உடலுறவு உடன் ஒப்பீடு செய்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஆவேசமாக விமர்சித்துள்ளார். 

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், திராவிடர் கழக மேடையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பொன்முடி பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு திமுக எடுத்த நடவடிக்கை போதுமானதல்ல என்று மணி குற்றம்சாட்டி உள்ளார்.

பொன்முடியின் பேச்சு: பெண்களுக்கு எதிரான இழிவு

தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பெண்களைப் பற்றி ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், சைவ-வைணவ மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. “பொன்முடி செக்ஸ் வொர்க்கர்களை குறிப்பிடும் பாரம்பரிய வார்த்தையைப் பயன்படுத்தினார். இது ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை இப்படி இழிவுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்,” என்று மணி கூறினார்.

அவர் மேலும், “பொன்முடியின் பேச்சு பெண்களுக்கு எதிரானது மட்டுமல்ல, மத உணர்வுகளையும் புண்படுத்தியது. இதற்கு மகளிர் அமைப்புகள் தெருவில் இறங்கி போராடியிருக்க வேண்டும். ஆனால், திராவிடர் கழகமோ, கூட்டணி கட்சிகளோ இதை கண்டிக்கவில்லை,” என்று வேதனை தெரிவித்தார்.

திமுகவின் நடவடிக்கை: தண்டனையா, கண்துடைப்பா?

பொன்முடியை திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது குறித்து மணி கேள்வி எழுப்பினார். “இது தண்டனையா? இது ஒரு கட்சி பதவி. இதை நீக்குவதால் என்ன பயன்? அவர் இன்னும் அமைச்சராகவே இருக்கிறார். உடனடியாக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கி, கட்சியிலிருந்து ஒரு ஆண்டு இடைநீக்கம் செய்திருக்க வேண்டும்,” என்று மணி வலியுறுத்தினார்.

“இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கை சிதையும்,” என்று அவர் எச்சரித்தார்.

கூட்டணி கட்சிகளின் மௌனம்: ஏன்?

திமுகவின் கூட்டணி கட்சிகளான சிபிஎம், விசிக, காங்கிரஸ் ஆகியவை இவ்விவகாரத்தில் மௌனம் காப்பதை மணி விமர்சித்தார். “சிபிஎம் ஒரு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மட்டும் கூறியது. மற்ற கட்சிகள் ஏன் வாய் திறக்கவில்லை? இதே பாஜக அல்லது அதிமுக செய்திருந்தால் இவ்வளவு அமைதியாக இருந்திருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

திராவிடர் கழகத்தின் பங்கு

பொன்முடியின் பேச்சு திராவிடர் கழக மேடையில் நிகழ்ந்த போதிலும், அந்த அமைப்பு கண்டனம் தெரிவிக்காதது குறித்து மணி அதிருப்தி வெளிப்படுத்தினார். “ஆயிரம் புரட்சி பேசும் கி. வீரமணி ஏன் அமைதியாக இருக்கிறார்? இது அவர்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டார். மேலும், திராவிடர் கழகத்தின் கடந்தகால பட்டிமன்றங்களில் இந்து மத இதிகாசங்களை இழிவுபடுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பொன்முடியின் பின்னணி

பொன்முடியின் முந்தைய செயல்பாடுகளையும் மணி சுட்டிக்காட்டினார். “கல்லூரி பேராசிரியராக இருந்த காலத்தில், திராவிடர் கழகத்தின் ஆபாசமான பட்டிமன்றங்களில் பொன்முடி பங்கேற்றவர். பேருந்தில் பெண்களைப் பார்த்து ‘ஓசி’ என்று கூறியவர். திரௌபதி அம்மன் கோயில் மூடப்பட்டதற்கு இவரும் ஒரு காரணம்,” என்று குறிப்பிட்டார்.

பாஜகவின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா?

இத்தகைய சம்பவங்கள் பாஜகவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று மணி எச்சரித்தார். “திமுகவின் இந்த தவறுகள், அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவை பெற்றுத் தரும். அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், சின்ன சின்ன தவறுகளையும் திமுக தவிர்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

துரைமுருகன் விவகாரம்: மன்னிப்பு ஏற்கலாமா?

துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து பேசிய மணி, “86 வயதான துரைமுருகன் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் மாற்றுத்திறனாளிகளை குறிக்க பழைய வார்த்தையைப் பயன்படுத்தினார். ஆனால், உடனடியாக மன்னிப்பு கேட்டார். அதை ஏற்கலாம். ஆனால், பொன்முடியின் பேச்சு வேறு. அவர் இன்னும் மன்னிப்பு கூறவில்லை,” என்று வேறுபடுத்திக் காட்டினார்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.