Vijayatharani joining BJP: ’விஜயதாரணி எண்ட்ரி! பொன்னாருக்கு டாட்டா காட்டுகிறாரா அண்ணாமலை!’ உடைத்து பேசும் மணி!
”இருந்த கூட்டணியை அண்ணாமலை உடைத்துள்ளார், நாசம் செய்துள்ளார். நீங்கள் புதியதாக கூட்டணியை உருவாக்க வேண்டாம். அந்த கூட்டணி இருந்தால் கடும் போட்டி இருந்து இருக்கும்”
விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறித்து, அதன் பின்னுள்ள நுண் அரசியல் குறித்தும் மூத்த பத்திரிக்கையாளர் மணி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில், விஜயதாரணி மூன்றாவது முறை எம்.எல்.ஏவாக உள்ளார். அவரது தாயார் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ பதவியை வாங்கி உள்ளார்.
தேசிய அளவில் பாஜக மீண்டும் வர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவதால் பசுமையான நிலப்பரப்பை நோக்கி செல்லோரும் ஓடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் நன்றாக பதவியை அனுபவித்தவர்கள்தான் இப்படி செய்கிறார்கள்.
ஒரு கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்ற பின் இப்படி செல்வது அவலமானது. என்ன டீலுக்காக அவர் சென்றார் என்பதை அவர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய சக்திகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது.
பாஜகவுக்கு விஸ்வாசமாக கடந்த 75 ஆண்டுகளாக பொன் ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார். அவருக்கு கன்னியாகுமரி சீட் கொடுக்காமல் விஜயதாரணிக்கு சீட் கொடுத்தால் காங்கிரஸ் கட்சியை பிடித்த எல்லா வியாதிகளும் பாஜகவுக்கு பிடிக்கிறது என்று அர்த்தம்.
கடந்த நான்கு, ஐந்து வருடமாக காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களால் பாஜகவுக்கு எந்த லாபமும் இருக்காது. இத்தகைய சக்திகள்தான் காங்கிரஸ் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம்.
இந்த சக்திகள் பாஜகவில் போய் சேர்கிறது என்றால் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் கதிதான், நாளை பாஜகவுக்கு வரும்.
சிட்டிங் எம் .எல்.ஏ என்பதால் விஜயதாரணிக்கு மீடியா கவரேஜ் கிடைக்கிறது. விஜயதாரணி போன்றவர்களால் பாஜகவுக்கு தம்படி பைசா பிரயோஜனம் கிடையாது. கன்னியாகுமரியில் டெடிக்கேட்டடாக பாஜகவுக்காக வேலை செய்த தொண்டனை நான் மதிக்கிறேன். பாஜகவுக்காக சித்தாந்ததை ஏற்றுக்கொண்டு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் வேலை செய்த தொண்டனை நாம் மதிக்கிறோம். அவன் விஜயதாரணி வருகையை விரும்புகிறானா?
விஜயதாரணி கட்சியில் இணையும்போது எல்.முருகன் இருக்கிறார், அண்ணாமலை இல்லாதது முக்கியமானதாக உள்ளது. அண்ணாமலைக்கு கட்சி என்ன மரியாதை கொடுத்து வருகிறது என்பது இதில் தெரிகிறது. அண்ணாமலை கட்சியில் இருந்து மெல்ல மெல்ல ஓரம் கட்டப்படுகிறார் என்றுதான் தகவல்கள் வருகிறது. அதிமுக உடன் நன்றாக இருந்த கூட்டணியை வாய்த்துடுக்காலும், ஆணவ பேச்சாலும் அவர் உடைத்தார். கட்சித் தலைமை அதனால்தான் எல்.முருகனுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்திருக்கிறது.
கூட்டணிக்காக கதவு, ஜன்னல், வாசல்படி எதெல்லாம் துறந்து வைக்க முடியுமோ திறந்து வைங்க, எவனாவது எட்டிப்பார்த்தானா?, மோடி இந்தியாவில் பவர் புல் லீடராக உள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு பலவீனமாக ஏன் பாஜக உள்ளது.
இருந்த கூட்டணியை அண்ணாமலை உடைத்துள்ளார், நாசம் செய்துள்ளார். நீங்கள் புதியதாக கூட்டணியை உருவாக்க வேண்டாம். அந்த கூட்டணி இருந்தால் கடும் போட்டி இருந்து இருக்கும்.
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். இப்படிப்பட்ட அரசியல்வாதியை நான் பார்த்தது இல்லை. ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் உள்ளதாக கூறுகிறாரே உங்கள் கருத்து என்ன என்ற செய்தியாளர் கேள்விக்கு அது அவர் சொந்த கருத்து என அண்ணாமலை கூறுகிறார். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள். யார் வருவார் உங்களிடம்., பலவீனமாக இருக்கும் ஒரு மாநிலத்தில் நல்லா இருக்கும் கூட்டணியை நாசம் செய்கிறார் என்றால் என்ன அரசியலை அண்ணாமலை செய்கிறார். அண்ணாமலையின் அரசியல் வாழ்கை எண்ணப்படலாம் என மணி கூறி உள்ளார்.