’நானும், நமிதாவும் முருக பக்தைகள்! இதில் அரசியல் இல்லை’ தமிழிசை சௌந்தராஜன் பேட்டி
”முருகன் மாநாடு தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும், சமூக விரோத நடவடிக்கைகளை அழிக்க முருகனின் வேல் உதவும் என்றும் பேட்டி”

மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாட்டால் தமிழக அரசுக்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற யோகாசன நிகழ்வுக்கு பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன், நடிகை நமிதாவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் நடைபெறவுள்ள முருகன் பக்தர்கள் மாநாடு, தமிழக அரசின் மதப் பாகுபாடு, மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்தார்.
முருகன் மாநாட்டில் அரசியல் இல்லை
மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து பேசிய தமிழிசை, “நானும் நமிதாவும் முருக பக்தைகள். இந்த மாநாடு அரசியல் மாநாடு அல்ல, அரசியல் பேசப்படவும் இல்லை. ஆனால், இது தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு வித்திடும். மாநாட்டு பந்தல் ஏற்கனவே நிரம்பி வழிகிறது. இதைப் பார்த்து தமிழக அரசுக்கு பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதும், அறிக்கைகள் விடுவதும் இதற்கு சான்று,” என்றார். மாநாடு தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும், சமூக விரோத நடவடிக்கைகளை அழிக்க முருகனின் வேல் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.