‘விஜய் work from home-ல் இல்லாமல் work from field-க்கு வந்தது மகிழ்ச்சி’ கலாய்க்கும் தமிழிசை!
“work from home-இல் இருந்து work from field-க்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் கட்சிகள் களத்தில் மற்ற கட்சிகளை சந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்”

‘விஜய் work from home-ல் இல்லாமல் work from field-க்கு வந்தது மகிழ்ச்சி’ பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் களத்தில் இறங்கியதற்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்தார். "work from home-இல் இருந்து work from field-க்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் கட்சிகள் களத்தில் மற்ற கட்சிகளை சந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
திமுகவே முதல் எதிரி
தமிழிசை, விஜய்யின் கட்சியை திமுகவுக்கு எதிராக கடுமையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். "திமுகவே உங்கள் முதல் எதிரியாக இருக்க வேண்டும். பாஜகவை சம்பிரதாயமாக எதிர்க்காமல், திமுக கூட்டணியை முழுமையாக எதிர்க்க வேண்டும்," என்றார். மேலும், விஜய்யின் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அரசியலில் ஈடுபடுத்தினாலும், அவர்களின் கல்வியை புறக்கணிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். "இளைஞர்கள் துடிப்பாக இருக்க வேண்டும், ஆனால் படிப்பை விட்டுவிடக் கூடாது," என்று கேட்டுக்கொண்டார்.
அமைச்சரவை கூட்டத்தில் சிறையில் நடத்த வேண்டிய நிலை
திமுக அரசை கடுமையாக விமர்சித்த தமிழிசை, "தமிழகத்தில் எந்த அமைச்சர் மீது வழக்கு இல்லை என்று கேட்கும் நிலை உள்ளது. திமுக அமைச்சரவை கூட்டத்தை சிறையிலோ நீதிமன்றத்திலோ நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது," என்று கூறினார். அனிதா ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியம், பொன்முடி, செந்தில் பாலாஜி, எம்.ஆர். பன்னீர்செல்வம் ஆகியோர் மீதான வழக்குகளை சுட்டிக்காட்டினார்.
யார் கூடா நட்பு?
மேலும், திமுகவும் காங்கிரஸும் எங்களை பார்த்து 'கூடா நட்பு' என பாஜகவை விமர்சிப்பதை ஏற்க முடியாது என தெரிவித்தார். "எல்லா கட்சிகளும் மக்களுக்காகவே போராடுகின்றன. திமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் தான். ஆனால், திமுக கூட்டணியே மக்களால் தேடப்படாத கூட்டணியாக உள்ளது," என்று குறிப்பிட்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என உறுதியாக தெரிவித்த தமிழிசை, "புதியவர்கள் வளரலாம், பழையவர்கள் வரலாம். ஆனால், மத்தியில் பலமாக ஆளும் பாஜகவும், தமிழகத்தை சிறப்பாக ஆண்ட அதிமுகவும் கூட்டணி அமைத்து 2026ஐ வெல்வோம்," என்றார்.
