’விஜய்க்கு கருத்தியல் குழப்பம்! கிளிப்பிள்ளை போல் திமுகவை பின்பற்றுகிறார்’ ஹெச்.ராஜா ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’விஜய்க்கு கருத்தியல் குழப்பம்! கிளிப்பிள்ளை போல் திமுகவை பின்பற்றுகிறார்’ ஹெச்.ராஜா ஆவேசம்!

’விஜய்க்கு கருத்தியல் குழப்பம்! கிளிப்பிள்ளை போல் திமுகவை பின்பற்றுகிறார்’ ஹெச்.ராஜா ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Published May 25, 2025 11:42 AM IST

”விஜய் தனது மாநாட்டில் வேலு நாச்சியாரை தேசபக்தராகப் புகழ்ந்ததையும், அதே நேரத்தில் ஈ.வெ.ராவை கருத்தியல் வழிகாட்டியாகக் குறிப்பிட்டதையும் ஹெச்.ராஜா முரண்பாடாக சுட்டிக்காட்டினார்”

’விஜய்க்கு கருத்தியல் குழப்பம்! கிளிப்பிள்ளை போல் திமுகவை பின்பற்றுகிறார்’ ஹெச்.ராஜா ஆவேசம்!
’விஜய்க்கு கருத்தியல் குழப்பம்! கிளிப்பிள்ளை போல் திமுகவை பின்பற்றுகிறார்’ ஹெச்.ராஜா ஆவேசம்!

தமிழகத்தில் ஆளும் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாகப் பேசினார். தமிழக அரசு போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், இதனால் இளைய தலைமுறை அழிவை நோக்கிச் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் ஊழல் மற்றும் அதிக விலை வசூலிப்பு நடைபெறுவதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

போதைப் பொருள் புழக்கம்: அரசின் தோல்வி

ஹெச்.ராஜா, தமிழகத்தில் சிந்தெடிக் போதைப் பொருட்களின் புழக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார். "தமிழக காவல்துறை ஒரு கிராம் சிந்தெடிக் டிரக் கூட கைப்பற்றவில்லை," என்று குறிப்பிட்ட அவர், ஜாபர் சாதிக் வழக்கில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மட்டுமே நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார். மேலும், குஜராத் துறைமுகம் வழியாக தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் வருவதாகவும், இதில் மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

டாஸ்மாக் ஊழல்: அதிக விலை வசூலிப்பு

தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக வசூலிக்கப்படுவதாக ஹெச்.ராஜா குற்றச்சாட்டு எழுப்பினார். "குவார்ட்டருக்கு 10 ரூபாய், ஆஃப்க்கு 20 ரூபாய், முழு பாட்டிலுக்கு 40 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார். இந்த ஊழல் முறைகேடுகள் உச்சநீதிமன்றத்திற்கு தெரியும் என்றும், இதற்கு எதிராக அமலாக்கத் துறைக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மதுவிற்பனை மூலம் 52,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாகவும், இது மத்தியப் பிரதேசத்தின் மதுவிற்பனை வருமானத்தை விட மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைய தலைமுறையின் அழிவு

தமிழகத்தில் மது மற்றும் போதைப் பொருள் புழக்கம் இளைய தலைமுறையை அழித்து வருவதாக ஹெச்.ராஜா எச்சரித்தார். குறிப்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய பள்ளிகளுக்கு முன்பு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். "இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் முழுமையாக அழிந்துவிடும்," என்று அவர் கூறினார்.

விஜய்க்கு கருத்தியல் குழப்பம்

விஜய்யின் கருத்தியல் நிலைப்பாடு குழப்பமாக இருப்பதாகவும், அவர் திமுகவின் கருத்துகளை கிளிப்பிள்ளை போல் பின்பற்றுவதாகவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். குறிப்பாக, விஜய் தனது மாநாட்டில் வேலு நாச்சியாரை தேசபக்தராகப் புகழ்ந்ததையும், அதே நேரத்தில் ஈ.வெ.ராவை கருத்தியல் வழிகாட்டியாகக் குறிப்பிட்டதையும் ஹெச்.ராஜா முரண்பாடாக சுட்டிக்காட்டினார். வேலு நாச்சியார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிவகங்கை சமஸ்தானத்தை மீட்ட தேசபக்தராக இருக்க, பெரியார் 1944-இல் திராவிட கழகத்தின் முதல் மாநாட்டில் "வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது" என்று கூறியதாகவும், காந்தியின் விடுதலைப் போராட்டத்தை "பைத்தியக்காரத்தனம்" என்று விமர்சித்ததாகவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார். பெரியார், வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினால் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் இழக்கப்படும் என்றும், சென்னை ராஜதானியை லண்டனில் இருந்து ஆள வேண்டும் என்றும் கூறியதாக எச்.ராஜா குற்றம்சாட்டினார். இதனால், பெரியாரை தேசத் துரோகியாகச் சித்தரித்த அவர், விஜய்யின் இந்தக் கருத்தியல் கலவையை "ஐடியலாஜிக்கலி கன்பியூஸ்டு" (கருத்தியல் குழப்பம்) என்று விமர்சித்தார்.