’முருகன் மாநாட்டை குஜராத், உ.பியில் நடத்தாது ஏன்?’ பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி
”தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்கனவே பழனியில் முருகர் மாநாட்டை நடத்தியிருப்பதாகவும், இப்போது பாஜகவின் மாநாட்டிற்கு என்ன தேவை இருக்கிறது என்றும் அவர் வினவினார்”

முருகரின் மாநாட்டை பாஜக ஏன் குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் அல்லது மத்தியப் பிரதேசத்தில் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதுரையில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருகன் மாநாடு குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்த மாநாட்டை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்துவதாகவும், இது மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்த மாநாடு ஆன்மீக நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டும் முயற்சியாக இருக்கலாம் என்று அவர் எச்சரித்தார்.
"முருகன் மாநாட்டை குஜராத், உத்தரப் பிரதேசத்தில் நடத்தலாமே?"
செல்வப்பெருந்தகை, தமிழகத்தின் கடவுளான முருகரின் மாநாட்டை பாஜக ஏன் குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் அல்லது மத்தியப் பிரதேசத்தில் நடத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். "தமிழ்நாட்டில் விநாயகரையும், ராமரையும் மக்கள் ஏற்று வணங்குவது போல, முருகன் மாநாட்டை வட மாநிலங்களில் நடத்தினால், அது இந்து கடவுள்களை சமமாக மதிக்கும் செய்தியாக இருக்கும். ஆனால், பாஜக தமிழ்நாட்டில் இதை அரசியல் செய்ய பயன்படுத்துகிறது," என்று அவர் கூறினார். மேலும், தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்கனவே பழனியில் முருகர் மாநாட்டை நடத்தியிருப்பதாகவும், இப்போது பாஜகவின் மாநாட்டிற்கு என்ன தேவை இருக்கிறது என்றும் அவர் வினவினார்.