மதுரை பொதுக்குழு: ’தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட திமுக’ கலாய்க்கும் செல்லூர் ராஜூ!
”1977ல் மதுரையில் பொதுக்குழு நடத்தினர், அடுத்த 12 ஆண்டுகள் வனவாசம் போய்விட்டார்கள். அதுபோலவே இப்போதும் மதுரையில் மதுரையில் பொதுக்குழு கூட்டியுள்ளனர்”

மதுரையில் பொதுக்குழு நடத்தி திமுக தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டது" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக பொதுக்குழுவை கடுமையாக விமர்சித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யாமல் வந்திருப்பதாகவும், திமுக பொதுக்குழுவில் மக்கள் கூட்டம் தானாக சேர்ந்தது இல்லை என்றும் அவர் சாடினார்.
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு குறித்து கருத்து தெரிவித்த செல்லூர் ராஜூ, "முதல்வர் மதுரைக்கு வந்து எந்த நலத்திட்டங்களையும் அறிவிக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கூடியதாக திமுக கூறினாலும், வந்தவர்கள் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை, அழைத்து வரப்பட்ட கூட்டம். மக்கள் யாரும் முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று தன்னெழுச்சியாக வரவில்லை. 30-40 ஆயிரம் பேர் மட்டுமே கூடினர், அதிலும் பாதி பேர் சென்றுவிட்டனர்" என்றார்.