தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Seeman Urges Tn Government To Pay Hike For Government Doctors

Pay hike for doctors: அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு - சீமான் வலியுறுத்தல்

Karthikeyan S HT Tamil
Sep 15, 2022 08:19 PM IST

அரசு மருத்துவர்களின் அடிப்படை உரிமைகளைக்கூட நிறைவேற்றாமல் அலட்சியம் செய்யும் தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்.
சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உயிர் காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனைக்குரியதாகும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய ஊதியம் கேட்டுப் போராடிவரும் அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக்கூட நிறைவேற்றாமல் அலட்சியம் செய்யும் தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கொரோனோ பெருந்தொற்றுக் காலத்தில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மக்கள் உயிர்காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றியவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கொரோனோ நோய்த் தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர, அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பே முதன்மையான காரணமாகும்.

தமிழ்நாடு அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 354/2009 இன் படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தவேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை, கடந்த பதினொரு ஆண்டுகாலமாக உயர்த்தவில்லை என்பது சிறிதும் மனச்சான்றற்ற செயலாகும்.

பெருந்தொற்று நடவடிக்கைக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவிடும் தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவர்களுக்கு நியாயமாகத் தரவேண்டிய ஊதிய உயர்வை வழங்க மறுப்பது ஏன்? இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர் என்று அரசு கூறும் நிலையில், சுகாதாரத் துறையில் பின்தங்கியுள்ள மற்ற மாநில அரசுகள் வழங்கும் ஊதியத்திற்கும் கீழாக, இந்திய ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் ஊதியத்தைவிடக் குறைவான ஊதியத்தை தமிழ்நாடு அரசு வழங்குவது ஏன்?

தனியார் மருத்துவமனைகள் மருத்துவத்தை இலாபமீட்டும் தொழிலாக மாற்றியிருக்கும் தற்காலத்தில், தமிழகக் கிராமங்களில் ஓரளவாவது மருத்துவச் சேவை கிடைக்க அரசு மருத்துவர்களின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மையே முதன்மையான காரணமாகும். தமிழகத்தில் உள்ள 18,000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர். அத்தகைய போற்றுதற்குரிய அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியமளித்து அங்கீகரிக்க வேண்டியது ஒரு நல்ல அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு மக்களின் உயிர்காக்கும் பெரும்பணியாற்றும் அரசு மருத்துவர்களை, இனியும் உரிமைக்காக வீதியில் நின்று போராடும் நிலைக்குத் தள்ளாமல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என்று அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்