தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Seeman Statement About Kattupalli Port And Kosasthalaiyar

கொற்றலை ஆற்றின் நடுவே மின்கோபுரங்கள் அமைக்கும் முடிவைக் கைவிடுக - சீமான்

Divya Sekar HT Tamil
Aug 16, 2022 02:24 PM IST

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராகக் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொற்றலை ஆற்றின் குறுக்கே, இரண்டு இடங்களில் அணைகட்டி, தமிழகத்திற்கு வரவேண்டிய நீர்வளத்தைத் தடுக்க முயலும் ஆந்திர அரசின் செயல்பாட்டைக் கண்டித்து தமிழக அரசு கடிதமெழுதித் தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்திருப்பதை முழுமையாக வரவேற்கிறேன்.

அண்டை மாநிலத்துக்குச் சென்று சேரவேண்டிய நீர்வளத்தை, அணைகட்டி தடுக்க முயல்வது என்பது நீரியல் கோட்பாட்டு விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. அதனை வலியுறுத்தி ஆந்திர அரசின் வஞ்சகச்செயல்பாட்டை முறியடிக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேசமயம், தமிழக நிலப்பகுதியிலுள்ள கொற்றலை ஆற்றைப்பாதிக்கும் வகையில் சென்னை அருகே காட்டுப்பள்ளியில் 6,110 ஏக்கர் அளவுக்கு நடைபெறும் அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கப்பணிகளுக்கெதிராக தமிழக அரசு வாய்திறக்க மறுப்பதேன்?அப்பகுதியில், துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும்பட்சத்தில், கொற்றலை ஆறு மொத்தமாகக் கடலோடு கலந்துவிடும் பேராபத்து நிகழுமெனவும், சென்னை மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த 35 இலட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி, சூழலியல் அகதிகளாக மாறக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்தும் திமுக அரசு அதுகுறித்து எவ்வித அக்கறையும் காட்டாதிருப்பதேன்?

ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, அதானிக்குச் சாதகமாக நடந்துகொள்ளும்போது அவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் திமுக அரசு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திட்டத்தில் அதானிக்கு ஆதரவாக நிற்பது சந்தர்ப்பவாதம் இல்லையா? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? அதேபோல, வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தைப் புறநகர் பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காகக் கொண்டுசெல்ல, எண்ணூர் கொற்றலை ஆற்றுப்பகுதியில் உயர் மின் கம்பிகளைத் தாங்கும் புதிய கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்கி, செயல்பாட்டினை முன்னெடுத்து வரும் தமிழக அரசின் செயலானது பெருங்கேடு விளைவிக்கும் மிகத்தவறான முடிவாகும்.

ஆகவே, கொற்றலை ஆற்றைக் காக்க ஆந்திர அரசுக்குக் கடிதமெழுதிய தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அதே அக்கறையோடு, தமிழக நிலப்பகுதியில் கொற்றலை ஆற்றின் நடுவே மின்கோபுரங்கள் அமைக்கும் முடிவைக் கைவிடுவதோடு, அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராகக் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்