தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Seeman Slams Dmk Government Over Aavin Milk Producer Issues In Tamil Nadu

Seeman : ஆவின் பால் உற்பத்தியாளர்களை ஏமாற்றும் திமுக அரசு - சீமான் காட்டம்

Karthikeyan S HT Tamil
Mar 18, 2023 10:20 PM IST

ஆவின் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
சீமான்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ.., "தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஆவின் பால் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆவின் பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் போதிய அளவு பால் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையிலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த திமுக அரசு தொடர்ந்து மறுத்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

உரிய கொள்முதல் விலை வழங்கப்படாததால் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்தப் பால் உற்பத்தியில் 16 விழுக்காடு மட்டுமே தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகின்றது. மீதமுள்ள 84 விழுக்காடு அளவுக்கான பாலை தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. இதனால், தமிழ்நாடு அரசு நிர்ணயிக்கும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையின் பயன்கள் பெரும்பான்மையான மக்களைச் சென்று சேர்வதில்லை. தற்போது மீதமுள்ள ஆவின் பால் உற்பத்தியையும் முடக்கி, ஆவின் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது.

தீவன விலை உட்பட மாடுகளுக்கான பராமரிப்புச்செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் வழங்குவதைவிட 10 ரூபாய் அளவுக்குக் குறைவான விலையில் அரசு நிறுவனமான ஆவின் பால் கொள்முதல் செய்வது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். ஆவின் பால் கிடைக்கப்பெறாமலும், அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்கள் விற்கும் பாலினை வாங்க முடியாமலும் ஏழை, எளிய மக்கள் தவித்து வரும் நிலையில், பால் விலையை உயர்த்துவதாகக் கூறி ஆவின் பால் உற்பத்தியாளர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து, திமுக அரசு மீண்டும் மீண்டும் ஏமாற்றுவது என்பது அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு ஆவின் பால் கொள்முதல் விலையாக ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.45 ரூபாயாகவும், எருமைப் பாலுக்கு ரூ.55 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி, உற்பத்தியாளர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், ஆவின் கூட்டுறவு அமைப்புகளுக்கு அடித்தளமாகச் செயல்படும் கிராம சங்கப் பணியாளர்களைப் பணி வரைமுறைப்படுத்த தடையாக உள்ள விதி 149லிருந்து தளர்வு அளித்து அவர்களை ஆவின் நிறுவனப் பணியாளர்களாக அறிவித்திட வேண்டும்.

அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்திற்குப் பால் வழங்கும் அனைத்து வகை கறவை இனங்களுக்கும் ஆவின் நிறுவனமே இலவசக் காப்பீடு செய்து கொடுப்பதோடு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவதுபோல் ஆவின் சங்கப் பணியாளர்களுக்கும் முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அவசரகால மருத்துவச் சேவை வழங்கிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்