’தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி’ மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!
”இது சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது என்பது தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்”

உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு என சீமான் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் இரு ஆட்சியாண்டுகளான 2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து நிதியாண்டுகள் காலத்தில் சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக தமிழுக்கு ஓர் ஆண்டிற்கு சராசரியாக வெறும் 13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது என்பது தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
இன்று நேற்றல்ல பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து வருவதும், அதற்கு தொடர்ச்சியாக தமிழ்நாடு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்வதும் வழமையானது என்றாலும் மோடி அரசு அதனைப் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் பெருங்கொடுமையாகும்.