Seeman: ’பாஜக உடன் கூட்டணி எப்போது? புதிய தலைவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்!’ அம்பேத்கர் முன் பட்டென பேசிய சீமான்!
“திரும்ப திரும்ப அந்த கேள்வியை எழுப்புறதை நான் வெறுக்கிறேன், அருவருக்கிறேன்” என்று கோபத்துடன் கூறிய அவர், “நான் தனிச்சு போட்டிடுவேன், அதை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க முடியாது” என்று தெளிவுபடுத்தினார். “தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை” என்று உறுதியாக தெரிவித்தார்.

“எங்களின் பயணம் எங்கள் கால்களை நம்பிதான், அடுத்தவருடைய கால்களை நம்பி எங்கள் லட்சிய பயணம் இல்லை” என்று கூட்டணி குறித்த கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்து உள்ளார்.
அம்பேத்கரின் புரட்சிகர கருத்துகள்: உரிமைக்கான போராட்டம்
சீமான் தனது உரையை அம்பேத்கரின் உத்வேகமூட்டும் கருத்துகளுடன் தொடங்கினார். “அறிவை தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு உங்கள் நிழலை தேடி ஓடி வரும்” என்று அவர் மேற்கோள் காட்டி, “நாம் இழந்துவிட்ட உரிமைகளை பிச்சை கேட்டு பெற முடியாது, போராடித்தான் பெற்றாக வேண்டும்” என்று வலியுறுத்தினார். சமூகத்தில் தாழ்ந்து கிடக்கும் மக்களை தட்டியெழுப்பிய அம்பேத்கரின் புரட்சி மொழிகளை பாராட்டினார்.
“கோயில்களில் எப்போதும் ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள், சிங்கங்களை அல்ல” என்று கூறிய சீமான், “ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, ஒரு நொடியேனும் சுதந்திரமாக, வீரமாக வாழ்ந்து சாவது மேலானது” என்று அம்பேத்கரின் உரிமைக்கான உணர்வை மக்களுக்கு எடுத்துரைத்தார். அடிமைப்பட்ட சமூகங்களுக்கு உணர்வு ஊட்டிய புரட்சியாளராக அம்பேத்கரை புகழ்ந்தார்.
சாதி ஏற்றத்தாழ்வு: சமூக மேம்பாட்டிற்கு தடை
சாதியை ஒழிப்பதற்கு அம்பேத்கரின் பங்களிப்பை விவரித்த சீமான், “சாதியை ஏற்றதாழ்வுகளை வைத்துக்கொண்டு சமூக மேம்பாடு, சமூக முன்னேற்றம் என்று பேசுவதெல்லாம், சாக்கடை குளியின் மேலே போடுகிற சந்தன பந்தலுக்கு சமமானது, மலக்குழியின் மேலே போடுகிற மல்லிகை பந்தலுக்கு சமமானது” என்று கடுமையாக விமர்சித்தார். “சாதிய இழிவை துடைத்தெறிய நாம் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது” என்று கூறி, சாதி மற்றும் தீண்டாமை கொடுமைகளை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
அம்பேத்கர் இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து, சமநிலை சமூகத்தை உருவாக்க பாடுபட்டவர் என்பதை நினைவுகூர்ந்த சீமான், “மக்களுக்காக போராடுகிறவன் தலைவன், மக்களை போராட தயார் செய்கிறவன் புரட்சியாளன்” என்று அவரை புகழ்ந்தார். “என்னை கடவுளாக்கி வழிபடாதே, என்னை கருவியாக்கி போராடு” என்ற அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி, உரிமைக்காக போராடும் உயர்ந்த லட்சியத்தை தமிழ் தேசிய இனம் ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை: ஆட்சி அதிகாரத்திற்கு அடிப்படை
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை வலியுறுத்திய சீமான், “தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒன்றிணைப்பு நடந்தாலே, இந்த நாட்டில் ஆட்சி அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கும்” என்று கூறினார். ஆனால், “நம்ம ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்ளே ஒரு கோடி பிளவு இருக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளே பல பிரிவுகள் இருக்கு, சொந்த இரத்தங்களுக்குள் யுத்தம்” என்று வருத்தம் தெரிவித்தார். “ஒரு நோக்கம் கொண்டு ஒருமையாக ஒரு இடத்தில் கூட முடியாவிட்டால், அந்த மக்களுக்கு அரசியலும் இல்லை, அதிகாரமும் இல்லை” என்று அவர் எச்சரித்தார்.
அம்பேத்கர் இந்த பிளவுகளை உணர்ந்து, ஒற்றுமைக்காக போராடியதை நினைவுகூர்ந்த சீமான், “அவரால் கற்பிக்க முடிந்தது, அவர் வாழ்நாளில் போராட முடிந்தது, அதை தொடர்ந்து பின்பற்றி வெற்றி பெற வேண்டியது நம் பொறுப்பு” என்று கூறினார்.
தலித் என்பது எந்த மொழிச்சொல்!
தமிழர்களின் அடையாளத்தை உயர்த்துவது குறித்து பேசிய சீமான், “நாங்க தமிழர், அதுல ஆதி தமிழர்ங்கிற ஒரு திமிரும், பெருமிதமும் எங்களுக்கு இருக்கு” என்று பெருமையுடன் தெரிவித்தார். “தலித்ங்கிறது எந்த மொழி சொல்? நாங்க ஆதி தமிழன் என்று சொல்லிக்கிறதுதான் பெருமை” என்று கூறினார். “ஜெய் பீம்னு முழங்குறதுல எனக்கு ஒரு சிறுமையும் கிடையாது, பல மடங்கு பெருமைதான்” என்று தெரிவித்த அவர், “என் தம்பி எல்லாம் ஜெய் பீம் சொல்லும்போது, நாங்களும் திருப்பி ஜெய் பீம் முழங்குவோம், ஆனால் அதை தமிழ்ப்படுத்தி முழங்குவோம்” என்று உறுதியளித்தார்.
கூட்டணி குறித்து திட்டவட்டம்
கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சீமான் திட்டவட்டமாக பதிலளித்தார். “நான் தனிச்சு நின்னு போராடி முன்னேறி போறதுக்கு காரணம், யாருடனும் சேராமல் தனித்து நிற்பதுதான்” என்று கூறினார். பாஜகவுடன் கூட்டணி என்ற வதந்திகளை மறுத்து, “எனக்கு யாரும் வழிகாட்டவோ, அறிவுறுத்தவோ அவசியமில்லை, எனக்கு சொந்தமா மூளை இருக்கு, சிந்திக்கிற ஆற்றல் இருக்கு, நான் என்ன நினைக்கிறேனோ, அதைத்தான் செய்றேன்” என்று பதிலளித்தார்.
“திரும்ப திரும்ப அந்த கேள்வியை எழுப்புறதை நான் வெறுக்கிறேன், அருவருக்கிறேன்” என்று கோபத்துடன் கூறிய அவர், “நான் தனிச்சு போட்டிடுவேன், அதை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க முடியாது” என்று தெளிவுபடுத்தினார். “தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை” என்று உறுதியாக தெரிவித்தார்.
சாதி மனநோய்: பொருளாதார மேம்பாடு தீர்வு
சாதி சார்ந்த பிரச்சினைகளை ஒரு “மனநோய்” என்று வர்ணித்த சீமான், “ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையில் படிந்திருக்கிற அழுக்கு, அதை அவர்களே கழுவ வேண்டும்” என்று கூறினார். “ஒரு மனிதன் சக மனிதனை தாழ்த்தி, வீழ்த்தி சுகம் காணுவது மனநோய்” என்று விமர்சித்தார். இதற்கு தீர்வாக, “வகுப்புவாரி பெருநீதித்துவத்தை கடைசி கருவியாக கருதுகிறோம்” என்று தெரிவித்தார்.
“எல்லாருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம் கிடைக்கும்போது, சாதி ஏற்றத்தாழ்வுகள் தானாக செத்து ஒழியும்” என்று நம்பிக்கை தெரிவித்த சீமான், “பொருளாதாரத்தில் மேம்படும்போது, சாதி ஏற்றத்தாழ்வுகள் சிறுகச் சிறுக ஒழிவதை பார்க்கிறோம்” என்று கூறினார். “பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிற இந்த புற்று நோயை ஒரே நாளில் குணப்படுத்த முடியாது, ஒவ்வொருவரும் அம்பேத்கராக மாற வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
ஆட்சி அதிகாரம்: அம்பேத்கரின் சாவி
அம்பேத்கரின் ஆட்சி அதிகாரம் குறித்த கருத்தை மேற்கோள் காட்டிய சீமான், “எல்லா துன்பங்களுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே, அதிகாரம் மிக வலிமையானது” என்று அவர் கூறியதை நினைவுகூர்ந்தார். “திராவிட அதிகாரம் மிக கொடுமையானதாக இருக்கு, அதை மாற்றணும்னு போராடுறோம்” என்று தெரிவித்தார்.
தேர்தல் அரசியல் குறித்து, “தேர்தல் பாதை, ஓட்டு பொறுக்கிகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறினார். ஆனால், “மக்களாட்சி ஏற்றுக்கொண்ட நாட்டில், கடைசி வலிமை அரசியல் அதிகார வலிமைதான்” என்று ஒப்புக்கொண்டார். “எங்களின் பயணம் எங்கள் கால்களை நம்பிதான், அடுத்தவருடைய கால்களை நம்பி எங்கள் லட்சிய பயணம் இல்லை” என்று உறுதியளித்தார்.
ஊழல் குற்றச்சாட்டு: தமிழ்நாட்டின் நிலை
தமிழ்நாட்டில் நடந்ததாக கூறப்படும் ஊழல் குறித்து பேசிய சீமான், “39,000 கோடி ஊழல் நடந்திருக்கலாம், அதைவிட கூடுதலாகவும் நடந்திருக்கலாம்” என்று கூறினார். “அது ஒரு ஊழலே நடக்கலைன்னு சொல்ல முடியாது” என்று குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதில்களை விமர்சித்தார்.
பாஜகவின் அரசியல்: தலையிட முடியாது
பாஜகவின் தலைமை மாற்றம் மற்றும் அவர்களின் அரசியல் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவங்க கட்சி, அவங்க முடிவு. அதுல போய் கருத்து சொல்ல முடியாது” என்று தெரிவித்தார். புதிய தலைவருக்கு, “வாழ்த்துக்கள் சொல்லிட்டேன், அவ்வளவுதான்” என்று கூறி, அவர்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்தார்.
