Seeman praises Modi: ‘தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றும் மோடி’ அண்ணாமலை முன் பிரதமரை புகழ்ந்து தள்ளிய சீமான்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman Praises Modi: ‘தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றும் மோடி’ அண்ணாமலை முன் பிரதமரை புகழ்ந்து தள்ளிய சீமான்!

Seeman praises Modi: ‘தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றும் மோடி’ அண்ணாமலை முன் பிரதமரை புகழ்ந்து தள்ளிய சீமான்!

Kathiravan V HT Tamil
Published Apr 07, 2025 04:27 PM IST

"இந்த நாட்டின் பிரதமர், மாண்புமிக்க ஐயா நரேந்திர மோடி அவர்கள், உலகம் முழுவதும் செல்கிறார். என்ன சொல்கிறார்? உலகில் முதன்மொழி தமிழ். எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை. இந்திய மொழிகளின் தொன்மையை தமிழிலிருந்து அறியலாம்"

Seeman praises Modi: ‘தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றும் மோடி’ அண்ணாமலை முன் பிரதமரை புகழ்ந்து தள்ளிய சீமான்!
Seeman praises Modi: ‘தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றும் மோடி’ அண்ணாமலை முன் பிரதமரை புகழ்ந்து தள்ளிய சீமான்!

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “சொல் தமிழா சொல்” என்ற பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் நரேந்திர மோடியை உணர்ச்சி பொங்க புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீமான், மோடியை “மாண்புமிக்க ஐயா” என்று அழைத்து, தமிழ் மொழியின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுவதாக பாராட்டினார்.

மோடிக்கு சீமான் புகழாரம் 

சீமான் தனது பேச்சில், “இந்த நாட்டின் பிரதமர், மாண்புமிக்க ஐயா நரேந்திர மோடி அவர்கள், உலகம் முழுவதும் செல்கிறார். என்ன சொல்கிறார்? உலகில் முதன்மொழி தமிழ். எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை. இந்திய மொழிகளின் தொன்மையை தமிழிலிருந்து அறியலாம். உலகில் பல்வேறு நாடுகளில் மக்கள் தமிழைக் கற்றுக்கொள்ள பேரார்வம் கொண்டு வருகிறார்கள். இதை நான் சொல்லவில்லை; நாட்டின் பிரதமர் சொல்கிறார்,” என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

மேலும், “பெத்த தாயை பட்டினி போட்டுவிட்டு எத்தனை ஆயிரம் அன்னதானம் செய்தாலும் பலனில்லை. தாய்மொழி தெரியாமல் எவ்வளவு மொழிகள் கற்றாலும் நீ அறிவற்றவன். பெத்த தாய் யார் என்று தெரியாமல் நீ எப்படி இருப்பாய்?” என்று கேள்வி எழுப்பி, தமிழின் முக்கியத்துவத்தை மோடி உலகிற்கு உணர்த்துவதாக பாராட்டினார்.

தமிழ் மொழியின் பெருமை:

சீமான் தனது பேச்சில் தமிழின் தொன்மையை ஆங்கிலத்துடன் ஒப்பிட்டு பேசினார். “பாரதியை விட ஒரு புலவன் இருக்கிறானா? பாரதி எல்லா மொழிகளையும் கற்று, ‘யாம் இந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிமையானது எங்கும் காணோம்’ என்று சொன்னான். ஆங்கிலம் இயேசு பிறந்து 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவான மொழி. ஆனால், இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் தொன்மை இலக்கண நூல் தொல்காப்பியம் இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

தமிழ் சொற்களை எடுத்து கொண்ட ஆங்கிலம்

“ஆங்கிலத்தில் என்ன சிறப்பு? 500-க்கும் மேற்பட்ட கலைச்சொற்களை தமிழ் கொடுத்தது. என் ‘உடன்’ என்ற சொல்லுக்கு ஒரு ‘S’ சேர்த்து ‘சடன்’ ஆகிறது. என் ‘பேச்சு’ ஒரு ‘S’ சேர்த்து ‘ஸ்பீச்’ ஆகிறது. ‘பஞ்சு’ என்றால் ‘ஸ்பாஞ்சு’, ‘கொல்’ என்றால் ‘கில்’, ‘கட்டுமரம்’ என்றால் ‘கட்டுமரம்’, ‘நாவாய்’ என்றால் ‘நேவி’, ‘கலாச்சாரம்’ என்றால் ‘கல்சர்’. உனக்கு என்ன இருக்கிறது? நான் போட்ட பிச்சையில் நீ உமராகிறாய்,” என்று ஆங்கிலத்தை விமர்சித்து, தமிழின் செம்மையை எடுத்துரைத்தார்.

“இங்க பாரு, உனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். தாய்மொழியை பாதுகாத்த இனங்கள் கடுகளவு இருந்தாலும் மலையளவு உயர்ந்து வாழும். தாய்மொழியை அழிய விட்ட இனங்கள் மலையளவு இருந்தாலும் கடுகளவு சிறுத்து வீழும். இதை நன்கு விளங்கிக்க,” என்று தொடங்கினார்.

“உனக்கு ஒரு திமிர் இருக்கு. நீ கன்னடனா, மராட்டியனா, மலையாளியா, தெலுங்கனா, பீகாரியா, குஜராத்தியா—நீ யாராவது இரு. ஆனால், ‘நான் மராட்டியன்’ என்ற திமிரோடு நீயா இரு. நான் ‘நானா’ இருக்கேன்,” என்று தனது தமிழ் அடையாளத்தை பெருமிதத்துடன் வெளிப்படுத்தினார்.

அண்ணாமலைக்கு சீமான் பதில் 

அண்ணாமலையை “தம்பி” என்று குறிப்பிட்டு, “என் தம்பி சொல்றாரு, ‘நான் இந்தியத்திலிருந்து தமிழை பார்க்கிறேன்.’ நான் தமிழகத்திலிருந்து தேசியத்தை பார்க்கிறேன். நான் என் தம்பிக்கு ஒரு விஷயம் சொல்றேன், நான் முதல்ல என் அம்மாவுக்கு மகனா இருக்கேன், அப்புறம் அத்தைக்கு மருமகனா இருக்கேன். இந்த தேசம் நல்லா இருக்கணும்னா, இந்த நாடு நல்லா இருக்கணும்னா, முதல்ல என் வீடு நல்லா இருக்கணும். என் வீடு நல்லா இருக்கணும், உன் வீடு நல்லா இருக்கணும், அவர் வீடு நல்லா இருக்கணும். எல்லா வீடும் நல்லா இருந்தால் நாடு நல்லா இருக்கும். அவ்வளவுதான்,” என்று முடித்தார்.