Crime: கள்ளக்காதலால் விபரீதம்: 2-வது மனைவியை தீர்த்துகட்டிய கணவர்!
கள்ளக்காதலை கைவிட மறுத்த 2-வது மனைவியை படுகொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (48). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமான நிலையில் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதனிடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மாதேஸ்வரன், சேலம் ஜவுளி கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் தனியார் டைல்ஸ் கடையில் வேலை செய்தபோது, அங்கு உடன் பணியாற்றிய ஷெகனாஷ் (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஏற்கனவே ஷெகனாஷ் திருமணம் ஆகி கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில், முதல் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து மாதேஸ்வரன், ஷெகனாஷை 2வது திருமணம் செய்து கொண்டு தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் திடீரென ஷெகனாஷின் கழுத்தில் துண்டை வைத்து இறுக்கி அவரை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஷெகனாஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவரான மாதேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், 2-வது மனைவியை கொன்றது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாதேஸ்வரன் அளித்த வாக்குமூலத்தில் திருமணமான பிறகு ஷெகனாசும், மாதேஸ்வரனும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஷெகனாஷின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படவே மாதேஸ்வரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை கண்காணித்து வந்ததில் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் ஷெகனாஷூக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மாதேஸ்வரன் ஷெகனாஷை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் அந்த இளைஞருடன் கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன், துண்டால் ஷெகனாஷின் கழுத்தை சுற்றி இறுக்கி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று இரவு அன்னதானப்பட்டி போலீசில் சரண் அடைந்துள்ளார். கைது செய்யப்பட்ட மாதேஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.