’ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

’ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

Kathiravan V HT Tamil
Published Jun 21, 2025 11:38 AM IST

“மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது”

’ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
’ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் கலை மற்றும் கல்வித் திறன்களை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். ‘கலை சிற்பி’ திட்டம், கல்லூரி களப்பயணங்கள், தொல்லியல் பயிற்சி, மற்றும் மாணவர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் முயற்சிகள் உள்ளிட்டவை அவரது உரையில் முக்கிய இடம்பெற்றன.

‘கலை சிற்பி’ திட்டம்: மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களின் கலைத் திறன்களை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கலை சிற்பி’ திட்டத்தைப் பற்றி அமைச்சர் விளக்கினார். “மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஓவியம் உள்ளிட்ட கலைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆறு நாட்கள் தங்கியிருந்து பயிற்சி வழங்கப்பட்டது,” என்றார். இந்தப் பயிற்சி மாணவர்களுக்கு புதிய கண்ணோட்டத்தை அளித்ததாகவும், வல்லுநர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

முதலமைச்சரின் ஊக்குவிக்கும் முயற்சிகள்

மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் முதலமைச்சரின் அணுகுமுறையை அமைச்சர் புகழ்ந்தார். “திருச்சி மாவட்டத்தில் ஆதி திராவிடர் பள்ளியைச் சேர்ந்த ராகினி என்ற மாணவி, கிளாட் (CLAT) தேர்வில் தேர்ச்சி பெற்று நாக்பூரில் உள்ள சட்டக் கல்லூரியில் இடம் பெற்றார். அவரை வரவேற்க வந்தபோது, முதலமைச்சர் வாகனத்திலிருந்து இறங்கி வாழ்த்துவது மட்டுமல்லாமல், சமூக நீதி திட்டங்களுக்கு பயன்படுத்திய பேனாவை பரிசாக வழங்கினார். இது எங்கள் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கிறது,” என்று அமைச்சர் தெரிவித்தார். இதுபோன்ற முயற்சிகள் மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், ‘கலை சிற்பி’ திட்டமும் இதற்கு அடுத்தபடியாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

கல்லூரி களப்பயணங்கள்: மாணவர்களுக்கு மனப்பான்மை உருவாக்கம்

கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரி கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு மேற்கொண்டு வரும் களப்பயணத் திட்டத்தைப் பற்றி அமைச்சர் விளக்கினார். “11-ஆம் வகுப்பு மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று, ஆய்வகங்கள், வகுப்பறைகள், பேராசிரியர்கள், மற்றும் விளையாட்டு வசதிகள் குறித்து அறிமுகப்படுத்துகிறோம். முதல் ஆண்டு 33,000 மாணவர்கள் பங்கேற்ற இத்திட்டம், தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கி உள்ளது. இதன் மூலம், ‘நானும் கல்லூரியில் சேர வேண்டும்’ என்ற மனப்பான்மை மாணவர்களிடம் உருவாக்கப்படுகிறது,” என்றார். இத்திட்டம் வெறும் சுற்றுலாவாக இல்லாமல், மாணவர்களின் கல்வி லட்சியங்களை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘நான் முதல்வன்’ திட்டம்: மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்தகட்ட கல்வி வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். “பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளுக்கு அப்பால், அவர்களின் எதிர்காலப் பயணத்துக்கு வழிகாட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது. இது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது,” என்று கூறினார்.

கீழடி அகழ்வாராய்ச்சி

தொல்லியல் கல்வி மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் திட்டம் குறித்து பேசிய அமைச்சர், “ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்கள் குறித்து கற்பிக்கின்றனர். மாணவர்களை கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவோம்,” என்றார். இத்திட்டம் மாணவர்களுக்கு வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.