Karur IT Raid: ‘ கரூரில் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்தவர் இவர்தான்’ - சவுக்கு சங்கர் பரபரப்பு ட்வீட்!
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த நபர் இவர்தான் என்று சொல்லி சவுக்கு சங்கர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் 40 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக், மின் துறை தொடர்பான அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுக்க அவருக்கு இருக்கும் நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் அவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய செந்தில் பாலாஜி என்னுடைய இல்லங்களில் சோதனை எதுவும் நடக்கவில்லை. என் தம்பி, தெரிந்தவர்கள் வீடுகளில் நடக்கிறது. அதைப் பற்றி நான் இப்போது பேசுவது சரியாகயிருக்காது" என பேசினார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த நபர் என்று சொல்லி நபர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.