Savukku Shankar: ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!
”Savukku Shankar: கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்து உள்ளார்”
கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு வரும் மே 20ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுக்கு சங்கர் கைதின் பின்னணி
யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசாரும், திருச்சி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது மட்டுமின்றி அவரது வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் கஞ்சா பயன்படுத்தியதாக கூறி புதிய வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிந்துள்ளனர்.
மேலும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு சென்ற சவுக்கு சங்கர், தனது கையை காவல் துறையினர் உடைத்தாக நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவல் நாளை உடன் நிறைவடைகிறது.
பெண் காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார்
இதனிடையே திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் நேற்றைய தினம் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். கோவையில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும் வழியில் பெண் காவலர்கள் தன்னை முக கண்ணாடியை கழற்ற சொல்லி முகத்தில் அறைந்ததாகவும், மன்னிப்பு கேட்க சொல்லி வீடியோ எடுத்ததாகவும் நீதிபதியிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நாளை மறுநாள் 4 மணிக்குள் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் ரகசிய இடத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியியாகி உள்ளது.
இதன் இடையே தன் மீது பதியப்படுள்ள கஞ்சா வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு வரும் மே 20ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி
சவுக்கு சங்கர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அளித்தார். அப்போது, "சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பும் சிறையில் அடைப்பதற்கு முன்பும் என இரண்டு முறை முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவரது உடலில் எந்தவித பாதிப்பும் இல்லை. கை கால் நன்றாக இருந்தது. சிசிடிவி காட்சியிலும் இது தெரியும். தற்போது அவரது கைகள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடலில் தடிப்பு தடிப்பாக ரத்தக் கட்டுகள் ஏற்பட்டுள்ளன. சவுக்கு சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்களை கட்டிவிட்டு, குச்சியில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார் என அவரது வழக்கறிஞர் கூறி இருந்தார்.