Kilambakkam Bus Terminus: ’டெண்டர் 2.5கோடி லாபம் 50 கோடி!’ 2 அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் புகார்!
”Kilambakkam Bus Terminus: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு குறித்த டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாக சவுக்கு சங்கர் புகார்”
புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிப்பதற்காக விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டி முடித்து, அதனை 15 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தத்தை வெளிப்படையாக நடத்தாமல் பிவிஜி என்ற நிறுவனம் பங்கேற்கும் வகையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
பிவிஜி என்ற ஒரே நிறுவனத்திற்கு ரகசியமான முறையில் டெண்டரை தந்தது மட்டுமின்றி அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளனர்.
பிவிஜி நிறுவனம் 2.40 கோடி ரூபாயை சிஎம்டிஏவுக்கு செலுத்துகிறது. ஆனால் பிவிஜி நிறுவனத்திற்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது.
இந்த ஊழலில் சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்த்துறை அமைச்சர் சிவசங்கர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா, நிதித்துறை கூடுதல் செயலர் பிரகாஷ் வடநாரே ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளேன்.
திமுக அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இதனை விசாரிக்காது என்று எனக்கு தெரியும். ஆனால் நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் நிச்சயம் இது விசாரிக்கப்படும். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நான் நாட உள்ளேன் என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.