Savukku Shankar: ‘டீம் லன்ச் போனோம்.. வாக்குவாதம் ஆச்சு’ சவுக்கு சங்கர் கைதின் போது நடந்ததை விளக்கும் லியோ!
‘ஏசிக்கு உண்மையில், கைது செய்ய உடன்பாடில்லை. அவருக்கும் தெரியும், இது சட்டவிரோதமான கைது என்று. பேச்சு முற்ற, அருகில் இருந்த ஐஎஸ், ‘இவரை உள்ள ஏத்துங்க’ என்று, ஏசியிடம் கூறினார். அதை கேட்டதும் சங்கர் புரிந்து கொண்டார்’
நிபந்தனை ஜாமின் விதிகளை மீறியதாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. மதுரை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்கிற கேள்வி, பலரிடமும் உள்ளது. சவுக்கு மீடியாவில், தடா ரஹீமிடம் எடுத்த நேர்காணலின் போது, சவுக்கு ஊழியர் லியோ, அது குறித்து விளக்கியுள்ளார். இதோ சவுக்கு சங்கர் கைதின் போது நடந்தது என்ன என்று, லியோ கூறியவை:
‘‘சிறைக்கு போகும் முன், பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக ஒரு நேர்காணலை அவரிடம் எடுத்தேன். அது முடிந்த பின், டீம் எல்லாரும் சேர்ந்து லன்ச் போகலாம் என்று சவுக்கு சார் சொன்னார். அது சம்மந்தமாக அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம், அப்போது, பசங்ககிட்ட நான் சொன்னேன், ‘ஒரு மாதிரி பேசிட்டு இருக்காங்கடா.. சம்மன் கொடுக்குறாங்க. சாப்பிட போறோம்.. ஒருவேளை இதுவே கடைசி சாப்பாடா இருக்கலாம், கைது பண்ணாலும் பண்ணலாம்,’ அப்படினும் அவர்களிடம் நான் கூறிக் கொண்டிருந்தேன்.
அதன் பின், எல்லாரும் சாப்பிட புறப்பட்டு, அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கினோம். காரில் ஏறப் போகும் போது, ஐஎஸ்..,யில் இருந்து ஒருவர் வந்தார். ‘தேனாம்பேட்டை ஏசி உங்களை பார்க்கணுமாம்’ என்று சவுக்கு சங்கரிடம் கூறினார். ‘சரி சார் நான் பார்க்கிறேன், டீம் கூட லன்ச் சாப்பிட போறேன், போய்ட்டு வந்து, பார்க்கிறேன்’ என்று சங்கர் கூறினார்.
செல்போனை கொடுத்து அனுப்பிய சங்கர்
‘இல்ல.. இல்ல.. ஏசி இங்கே தான் இருக்கார்.. நீங்க பார்த்துட்டு போயிடுங்க’ என்று அந்த ஐஎஸ்., அதிகாரி கூறினார். ‘சார்.. ஏசியை பார்த்தா நேரம் ஆகும், பசங்க பசியில் இருக்காங்க, போய் சாப்பிட்டு வந்திடுறேன்’ என்று சங்கர் கூறினார். ‘இல்ல.. இல்ல.. நீங்க பார்த்துட்டு போயிடுங்க..’ என்று அவர் அந்த ஐஎஸ் அதிகாரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இன்னும் சில, சீருடை இல்லாத போலீசார் வந்தார்கள்.
அவர்களை பார்த்ததுமே சங்கர் புரிந்து கொண்டார், ‘இத்தனை பேர் சீருடை இல்லாமல் வருகிறார்கள் என்றால், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது’ என்று அவர் புரிந்து கொண்டார். உடனே, தன்னுடைய செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை அலுவலகத்தில் பணியாற்றும் பையன் ஒருவனிடம் கொடுத்துவிட்டார். அவருக்கு கைது நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. இதற்கு முன் அவர் கைதான போது, அவருடைய மொபைல் போனை எடுத்து, என்ன பண்ணார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அந்த முன்னெச்சரிக்கையில் தான், தன்னுடைய போனை, அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரிடம் அவர் கொடுத்துவிட்டார்.
போலீசாருக்கு கைது செய்யும் எண்ணம் இல்லை
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே, தூரத்தில் இருந்த ஏசி, அருகில் வந்தார். ‘நீங்க ஜாமின் நிபந்தனை படிவத்தில் கையெழுத்திடவில்லை, அதனால் உங்களை கைது செய்கிறோம்’ என்று கூறினார். ‘சரி சார், அதற்கான ஆவணம் இருந்தால் தாங்க,’ என்று சவுக்கு சங்கர் கேட்டார். ‘சம்மன் தர்றேன்.. ஸ்டேஷன் வாங்க’ என்று ஏசி கூறினார். ‘சரி சார், மதுரை போலீஸ் தான் என்னை கைது பண்ணனும், நீங்க ஏன் பண்றீங்க?’ என்று சங்கர் கேட்டார்.
‘என்னிடம் சம்மன் இருக்கிறது’ என்று ஏசி சொல்ல, ‘சம்மன் இருந்தால் கொடுங்க’ என்று சங்கர் மீண்டும் கேட்டார். பேச்சு இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு கட்டத்தில் சூடாகிறது. ஏசிக்கு உண்மையில், கைது செய்ய உடன்பாடில்லை. அவருக்கும் தெரியும், இது சட்டவிரோதமான கைது என்று. பேச்சு முற்ற, அருகில் இருந்த ஐஎஸ், ‘இவரை உள்ள ஏத்துங்க’ என்று, ஏசியிடம் கூறினார். அதை கேட்டதும் சங்கர் புரிந்து கொண்டார், இதுக்கு மேல் பேசி பயனில்லை, அலுவலகம் இருக்கும் தெருவில் இது நன்றாக இருக்கிறது என்று, வண்டியில் ஏறினார் சங்கர்.
எங்களையும் சுற்றி வளைத்தனர்
அவர் ஏறிய பிறகு, என்னிடமும், சங்கரின் டிரைவரையும் சுற்றிக் கொண்டனர். சங்கரின் போன் பற்றி கேட்டார்கள். என்னுடைய போனையும், டிரைவர் போனையும் வாங்கினார்கள். என்னையும், டிரைவரையும் சங்கர் காரில் அமர வைத்தார்கள். எங்களை போட்டோ எடுத்து, விபரங்களை யாருக்கோ அனுப்பினார்கள். ‘என்னையும் கைது செய்யப் போகிறீர்களா?’ என்று கேட்டேன். ‘இல்லை.. இதுவரை தகவல் எதுவும் வரவில்லை’ என்று கூறினார்கள்.
அதன் பின் பசி, ‘எங்களை சாப்பிட விடுங்க, இல்ல நீங்க வாங்கித் தாங்க’ என்று கேட்டேன். அவர்கள் வைத்திருந்த உணவை கொடுத்தார்கள். அதன் பின், ‘இங்க பாரு லியோ.. சங்கர் போனை கொடுத்துடு, இல்லைனா உனக்கு தான் பிரச்னை’ என்று சொன்னார்கள். ‘எனக்கு தெரியாது சார், என்னிடம் இல்லை. அவர் யாரிடம் கொடுத்தார் என்று தெரியவில்லை’ என்று கூறிவிட்டேன்.
11 மணி வரை மாடியில் வைக்கப்பட்டார்
11 மணி வரை தேனாம்பேட்டை ஏவிசி அலுவலக மாடியில் தான் அவரை வைத்திருந்தார்கள். யாரையுமே அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. சமீபத்தில் சிகிச்சைக்கு சென்றதால், தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறார். ஒருவேளை மாத்திரை விட்டாலும், அவருக்கு சிக்கல். அவருக்கு மாத்திரை வேண்டும் என அவருடைய வழக்கறிஞர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
அதன் பின், அருகில் உள்ள மெடிக்கலில் நான் தான் மாத்திரை வாங்கிக் கொடுத்தேன். அதன் பின், வெளியில் இருந்து மருந்துகளை வாங்க மறுத்துவிட்டனர். அதன் பின், மருத்துவ சீட்டை வாங்கி, போலீசாரே மாத்திரை வாங்கிக் கொடுத்தார்கள். 11 மணிக்கு மேல் தான், தேனாம்பேட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்,’’
என்று சவுக்கு மீடியா வெளியிட்டுள்ள வீடியோவில் லியோ கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் பேட்டியாளரின் கருத்துக்கள். இதற்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்