Savukku Shankar: ‘சவுக்கு சங்கர் வெளியே வர எத்தனை நாள் ஆகும்?’ ஜாமினில் உள்ள பின்னடைவு என்ன?’ வழக்கறிஞர் விளக்கம்!
Savukku Shankar: ‘‘உங்களுக்கு இது தான் வேலையா? இவர் ஒருவர் தான் இருக்கிறாரா? சட்டம் ஒழுங்கு வேலையை பார்க்க மாட்டீர்களா? ’ என்று போலீசாரை நோக்கி நீதிபதி கேள்வி எழுப்பினார்’’
Savukku Shankar: புழல் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு எப்போது ஜாமின் கிடைக்கும்? அவரது ஜாமினில் இருக்கும் சிக்கல் என்ன? என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை 1:45 மணிக்கு, அவரது தாயாருக்கு ஒரு மெஜேஜ் வந்துள்ளது. முதல் நாள் இரவு 11:10 மணிக்கு சவுக்கு சங்கரை கைது செய்திருப்பதாக, தேனி பழனிச்செட்டி பட்டி போலீஸ் அந்த மெஜேஜ் அனுப்பியிருந்தது. முதல் நாள் அவரை, பகல் 1 மணிக்கு தேனாம்பேட்டை போலீஸ் அழைத்துச் செல்கிறது. இரவு 11 மணி வரை, அவரை ஸ்டேஷனில் வைத்திருக்கிறார். எந்த வாரண்டும் இல்லாமல், விளக்கமும் இல்லாமல் அவரை எப்படி அழைத்துச் செல்ல முடியும்? இது சட்டவிரோதமான நடவடிக்கை.
சவுக்கு வழக்கில் இரண்டாவது இன்னிங்ஸ்
போலீஸ் கட்டுப்பாட்டில் இந்த மாநிலம் இருக்கிறது. யாருமே கேள்வி கேட்க முடியாது, வழக்கறிஞர்கள் சந்திக்க முடியாது, உறவினர்கள் சந்திக்க முடியாது, எந்த தொடர்புகளும் கிடையாது. ஒரு குடிமகனை 9 மணி நேரம், சட்டவிரோத காவலில் வைக்கிறார்கள். இவை கேள்வி கேட்க வேண்டிய யாருமே, கேள்வி கேட்கவில்லை. 18 ம் தேதி சவுக்கு சங்கரை மதுரை கொண்டு செல்கின்றனர். அதன் பின், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குகிறது.
கைதான பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவர் சூழலை விளக்கி, பிடிவாரண்டை ரத்து செய்ய நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். மறுபடியும் நீதிபதி ஏற்க மறுக்கிறார், நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். நீதிமன்ற உத்தரவில், சவுக்கு சங்கர் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். டிசம்பர் 19 ம் தேதி, வேறு ஒரு வழக்கில், சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை கைது செய்யப்படுகிறார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த உத்தரவில், அடுத்த மூன்று நாட்களில் பிணை கிடைத்துவிட்டது.
போலீசாரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி
போலீசுக்கு நன்றாகவே தெரியும், நீதிமன்ற வாரண்டில் கைதானவரை நீண்ட நாள் சிறையில் வைத்திருக்க முடியாது, பிணை கிடைத்துவிடும் என்று. அதனால் தான், அவர் சிறையில் இருக்கும் போதே வேறு வழக்கில் கைது செய்கிறார்கள். துப்புரவு பணியாளர்களை இழிவு செய்ததாக அந்த வழக்கு, சவுக்கு சங்கர் மீது போடப்பட்டது. அரசு திட்டங்களை விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஒருவேளை அதில் தவறு இருந்தால், அதற்கு வழக்குப் பதிவுசெய்து கிரிமினல் கைது செய்யும் குற்றம் அது அல்ல. மானநஷ்ட வழக்கு போடலாம், அவ்வளவு தான்.
அந்த வழக்கில் அவரை கைது செய்து, சென்னை அழைத்துச் செல்கிறார்கள். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, ‘உங்களுக்கு இது தான் வேலையா? இவர் ஒருவர் தான் இருக்கிறாரா? சட்டம் ஒழுங்கு வேலையை பார்க்க மாட்டீர்களா? ’ என்று போலீசாரை நோக்கி நீதிபதி கேள்வி எழுப்பினார். சிறையில் அடைக்க நீதிபதி மறுக்கிறார். திரும்ப அவர் மதுரை சிறை வந்ததும், மறுநாள் அவருக்கு முந்தைய வழக்கில் பிணை வந்துவிடுகிறது.
சென்னையில் இருந்து ஒரு போலீஸ்காரர், வாரண்ட் உடன் விமானத்தில் பயணம் செய்து மதுரை வருகிறார். சமூக ஆர்வலர் வாராஹி வழக்கு தொடர்பாக பேசியதாக, அவர் கைது செய்யப்படுகிறார். 16ம் தேதி பேசியதற்கு, 18 ம் தேதி வழக்குப் போட்டு, 19 ம் தேதி கைது செய்கின்றனர். என்ன காரணம் என்றால், அரசுக்கு எதிராக, போலீசுக்கு எதிராக பேசக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதற்காக தான் அவர் மீது இரு வழக்குகள் போடப்பட்டது.
சவுக்கு சங்கர் ஜாமினில் வருவதில் சிக்கல்
ஒரு வழக்கில், அவருக்கு சிறை தண்டனை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. வாராஹி வழக்கில், அவர் புழல் சிறையில் இருக்கிறார். அந்த வழக்கில், ஜாமினுக்கு காத்திருக்கிறோம். வெள்ளிக் கிழமை பெயில் கிடைத்துவிடும். பெயில் கிடைத்தால் கூட, 10 நாட்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். அது தான் அவர்களின் திட்டம். இந்த பெயில் வழக்கை முடிந்தவரை அவர்கள் நீதிமன்றத்தில் தாமதம் செய்தார்கள். பெயில் பெற்று இடைப்பட்ட அந்த 10 நாளில் இன்னும் அவர்கள் சில வழக்குகளை மறைத்து வைத்து, மீண்டும் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது.
சவுக்கு சங்கர் தவறு செய்தால், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கள், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. திரும்ப திரும்ப இவரை மட்டும் தான் கண்காணிப்பார்களா? தமிழ்நாட்டில் இவர் மட்டும் தான் பிரச்னைக்குரியவரா? தமிழ்நாட்டில் எவ்வளவு பரபரப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது? சவுக்கு சங்கர் மட்டும் தான் இவர்கள் பார்வையில் விழுவாரா?,’’
என்று வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
குறிப்பு: பேட்டியில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், தகவல்கள் அனைத்தும் பேட்டியாளரின் சொந்த கருத்துக்கள் மட்டுமே. அதற்கும், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பொதுவெளியில் வெளியான தகவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தி மட்டுமே.