Parangimalai student case: கல்லூரி மாணவி சத்யாவின் கொலைக்கான பின்னணி என்ன?
- சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணிக்கான காரணம் என்ன என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணிக்கான காரணம் என்ன என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
(1 / 7)
சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம் (47). இவரது மனைவி ராமலட்சுமி (43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியின் மகளான சத்யா (20) சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23), இவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன் மகன் ஆவார். சதீஷ் சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சத்யாவும் சதீஷும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
(2 / 7)
காவல் நிலையத்தில் புகார்: இருப்பினும் சதீஷ், சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதை சத்யா ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யாவை சந்தித்து சதீஷ் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தி-நகர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரையும் போலீசார் சமதானம் செய்து அனுப்பியதாக தெரிகிறது.
(3 / 7)
ரயிலில் தள்ளிவிட்டு கொலை: இந்நிலையில், கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு நேற்று மதியம் 1 மணியளவில் சத்யா வந்துள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த சதீஷ் சத்யாவை சந்தித்து தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்றுகொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் திடீரென சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில் சிக்கி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட உடனே சதீஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
(4 / 7)
சத்யாவின் தந்தை மரணம்: மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கம், தனது மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
(5 / 7)
சதீஷ் கைது: மொத்தம் 7 தனிப்படைகள் அமைத்துக் காவல் துறையும், ரயில்வே போலீசாரும் சதீஷை தேடிவந்த நிலையில், துரைப்பாக்கம் அருகே பதுங்கி இருந்தவரைத் தாம்பரம் ரயில்வே போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
(6 / 7)
விடிய விடிய விசாரணை: கைது செய்யப்பட்ட சதீஷ்யிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டதில் கடந்த 5 வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகவும், அவரது காதல் விவகாரம் தெரியவந்த நிலையில் கடந்த 7 மாதமாக சத்யா பேசாமல் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து தன் காதலை ஏற்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். இதனால் கல்லூரிக்கு சென்று சத்யாவை கட்டாயப்படுத்தி பேச முற்பட்ட போது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.
(7 / 7)
கொலையின் பின்னணி என்ன? கடந்த சில வாரங்களுக்கு முன்பு சத்யாவுக்கு வேறொரு நபருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து தன்னோடு வந்து விடுமாறு சத்யாவை வற்புறுத்தியதாக கூறியுள்ளார். ஆனால் வரமறுத்த நிலையில், சத்யாவை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திலே வந்ததாகவும், ரயில் முன் சத்யாவை தள்ளிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டவுடன், அவர்கள் தன்னை பிடிக்க முற்பட்டதாலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மற்ற கேலரிக்கள்