Sarathkumar:‘அன்றே நான் சொன்ன தீர்வு’-வடமாநிலத்தவர் விவகாரம் குறித்து சரத்குமார்
வடமாநில தொழிலாளர்கள் குறித்த பிரச்சினை குறித்து சரத்குமார் பேசியிருக்கிறார்
சமத்துவமக்கள் கட்சியின் 7 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் மீண்டும் தலைவராக சரத்குமாரே தேரந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து பேசிய அவர், “ வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து நான் 12 வருடத்திற்கு முன்னதாகவே இதை சொன்னேன்.
வட மாநிலத்தவர்கள் பலர் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் அவர்களை காவல்நிலையத்தில் பதிவு செய்து அனுமதியுங்கள் என்றேன். அதைக்கேட்ட பலரும் என்ன இந்த மாதிரியெல்லாம் பேசுகிறீர்கள் என்றார்கள்.
எதற்காக அப்படி சொன்னேன் என்றால் அவர்கள் இங்கு ஒரு குற்றத்தில் ஈடுபட்டு விட்டு வேறு எங்கேயோ சென்று விடுவர். அவர்களை பிடிக்க நாம் கல்கத்தா, நேபாளம் ஆகிய இடங்களுக்கு நாம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
அரசியல் சாசன சட்டப்படி யாரும் எங்குவேண்டும் என்றாலும் வேலை செய்யலாம்.அவர்கள் இங்கு வந்து வேலை செய்யுங்கள் என்றோ, நாம் அங்கு சென்று வேலை செய்வதை தடுக்கவோ யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களை தொந்தரவு செய்யக்கூடாது.” என்று பேசினார்.
ஆன்லைன் ரம்மியில் சரத்குமார் நடித்தது குறித்து கேட்ட போது, “ஆன்லைன் ரம்மி விளம்பரமானது நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடித்தது. மீண்டும் மீண்டும் என்னிடம் இது தொடர்பான கேள்வி வைக்கப்படுகிறது.
தொடர்ந்து இப்படியே கேட்டுக்கொண்டிருந்தால் இந்த கூட்டத்திற்கே மரியாதை இல்லாமல் போகி விடும். நான் மட்டும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்க வில்லை. என்னை மட்டும் குறைசொல்லிக்கொண்டிருக்க கூடாது. அது சட்ட விரோதமான காரியமில்லை.
அதற்கான தடை சட்டம் இயற்றும் போது நான் அதில் நடிக்க வில்லை. ஆகையால் நான் சட்டத்திற்கு புறம்பான செயலில் நான் ஈடுபடவில்லை. ஆகையால் அந்த கேள்வியை கேட்டு இந்த சந்திப்பை கெடுக்க வேண்டாம். என்னை பொறுத்தவரை மத்திய அரசும், மாநில அரசும் அதற்கு தடை சட்டம் இயற்றி தடுக்க வேண்டும்.” என்றார்.