Sanatana Dharma case: சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமின்!
Sanatana Dharma case: பெங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜரானார். அப்போது உதயநிதி தரப்பில் சனாதனம் தொடர்பான பல மாநிலங்களில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம்.
Sanatana Dharma case: சனாதனம் குறித்த பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சனாதன ஒழிப்பு மாநாடு
கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் திமுக எம்.பியான ஆ.ராசாவும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார்.
மோடி உள்ளிட்டோர் எதிர்ப்பு
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்களுக்கு பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சனாதனம் குறித்த பேச்சுக்கு பதிலடி தர வேண்டும் என பேசியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தான் பேசியதை தவறு எதுவும் இல்லை மன்னிப்பு கேட்க முடியாது. அதற்கான எந்த விளைவுகளையும் சந்திக்க தயார் என்று உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதை எடுத்து சனாதன பேச்சு குறித்து உதயநிதிக்கு எதிராக பீகார் உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா என பல பகுதிகளில் வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் உதயநிதி கருத்து தன்னையும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் இழிவுபடுத்துவதாக பெங்களூருவை சேர்ந்த பரமேஸ்வரா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று உதயநிதிக்கு ஏற்கனவே இரண்டு முறை சம்மன் வந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை மூன்றாவது முறை சம்மன் அனுப்பிய நிலையில் இன்று ஆஜராக விட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜரான உதயநிதி
இந்நிலையில் இன்று பெங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜரானார். அப்போது உதயநிதி தரப்பில் சனாதனம் தொடர்பான பல மாநிலங்களில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு விசாரணை நிலவையில் உள்ளது. இது தொடர்பாக புகார் தாரர்கள் பதில்மனு தாக்கல் செய்யப்பட வேண்டி உள்ளது.
இதனால் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து நீதிபதி வழக்கை வரும் ஆகஸ்ட் எட்டாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9