Salem MLA Arul: மாணவ மாணவிகள் காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ! திமுகவினர் அடாவடி!
“‘கண்ணு உங்க காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் அரசியல் செய்ய விரும்பல; நல்ல ஒழுக்கத்த கத்துக் கொடுக்க வேண்டிய எடத்துல உங்களை அசிங்கப்படுத்திவிட்டார்கள்”
சேலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் காலில் விழுந்து எம்.எல்.ஏ மன்னிப்புக்கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட பாகல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சேலம் இரா.அருள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த திமுக நிர்வாகிகள் சிலர் எம்.எல்.ஏ அருளை மிதிவண்டி கொடுக்கவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே மாணவ மாணவிகள் முன்னிலையில், திமுகவினர், எம்.எல்.ஏ தரப்பினரும் மாறிமாறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாங்களே மிதிவண்டி கொடுத்துக் கொள்கிறோம், நீங்கள் தலையிட வேண்டாம் என திமுக நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி என்பதால் என் தொகுதிக்கு உட்பட்ட பள்ளியில் தாம் சைக்கிள் வழங்குவேனென்றும், இது அரசு விழாதானே தவிர அரசியல் விழா அல்ல என்று எம்.எல்.ஏ தரப்பில் கூறினர்.
பின்னர் சைக்கிள் வழங்கிய பாமக நிர்வாகி அருள் திடீரென மாணவ மாணவிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
மைக்கில் பேசிக் கொண்டே இருந்த இரா.அருள் எம்.எல்.ஏ, “நல்ல கருத்துக்களை சொல்லவேண்டிய இடத்தில் ஒரு அநாகரீக செயல்பாட்டுக்குள்ளாகிவிட்டோம் என்று கூறியபடியே மாணவ மாணவிகள் காலில் விழுந்தார்.
‘கண்ணு உங்க காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் அரசியல் செய்ய விரும்பல; நல்ல ஒழுக்கத்த கத்துக் கொடுக்க வேண்டிய எடத்துல உங்களை அசிங்கப்படுத்திவிட்டார்கள். கட்சிக்காரனாக நான் இங்கு பேசல, உங்கள அசிங்கப்படுத்துன அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து நான் மீண்டும் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்’ என கூறினார்.
மாணவ, மாணவிகள் மத்தியில் எம்.எல்.ஏ காலில் விழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.