‘சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது!’ ஏன் தெரியுமா?
அரசு நிறுவனத்தில் பணியாற்றி வரும் துனைவேந்தர் வருவாய் ஈட்டும் வகையிலான நிறுவனத்தை தொடங்கியதே இந்த கைதுக்கு காரணம் என கூறப்படுகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகன் நாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருக்கும் ஜெகன்நாதன் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தப் நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் வர்த்தக நிறுவனத்தை தொடங்கியதாக புகார் எழுந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து வர்த்தக நிறுவனத்தை தொடங்கி உள்ளார். தனியார் கல்லூரிகளை வழங்க அனுமதி தருவதற்கான பவுண்டேஷனை பெரியார் பல்கலைக்கழகத்தை தொடங்கியது சட்டவிரோதம் என்பதால் பல்கலைக்கழங்களின் தொழிலாளர் நலச்சங்க ஆலோசகர் இளங்கோவன் சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் துணைவேந்தர் ஜெகன்நாதன் மீது புகார் அளித்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அரசு நிறுவனத்தில் பணியாற்றி வரும் துனைவேந்தர் வருவாய் ஈட்டும் வகையிலான நிறுவனத்தை தொடங்கியதே இந்த கைதுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது முன் வைக்கப்பட்டன.
மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் இன்னும் சிறிது நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகமானது சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.