Vetri Duraisamy: ’8 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை தகனம்!’
”சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இன்று மாலை 5 மணி அளவில் வெற்றி துரைசாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது”
சட்லெஜ் நதியில் விழுந்து உயிரிழந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமிக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின், கின்னார் மாவட்டத்தில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் சுற்றுலா சென்றபோது, காணாமல்போனார். மேலும், அவர் பயணித்த கார் பிப்ரவரி 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பாங்கி நல்லா அருகில் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. அந்தச் சம்பவத்தில் கார் ஓட்டுநர் நீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.அவரது பெயர் தன்ஜின் எனத் தெரிந்தது. மேலும் கோபிநாத் என்பவர், காயமடைந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டார்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் 200 மீட்டர் ஆழத்தில் சட்லஜ் நதியில் விழுந்தது. அதில் வெற்றி துரைசாமியையும், மற்றொரு பயணி பற்றியும் எந்தவொரு குறிப்பும் கிடைக்காமல் இருந்தது.
காசாவில் இருந்து சிம்லாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தனது மகன் வெற்றி துரைசாமியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு, ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்து இருந்தார். இதனை கின்னார் துணை ஆணையர் அமித் குமார் சர்மாவும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். துரைசாமியும் தனது மகனை கண்டுபிடிக்க உதவுமாறு உள்ளூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விபத்தினைத் தொடர்ந்து தேடுதல் குழுக்கள் ஆற்றங்கரையில் ஒரு சடலத்தின் எச்சங்களை மீட்டுள்ளன. மேலும் அவை டி.என்.ஏ பிரித்தெடுத்தல் மற்றும் பகுப்பாய்வுக்காக ஜுங்காவில் உள்ள மாநில தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த எச்சங்கள் காணாமல் போனவருடையதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அது டி.என்.ஏ.பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடலை 8 நாட்களுக்குப் பிறகு, நேற்றைய தினம் சட்லஜ் நதியில் இருந்து மீட்புப் படையினர் மீட்டர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக வெற்றியின் உடல் ரெகாங்புவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இன்று மாலை 5 மணி அளவில் வெற்றிதுரைசாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், 6 மணி அளவில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.