Durai Murugan Vs ED Raid: அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் 14 கோடி பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்!
அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து 13.7 கோடி ரொக்கமும், கதிர் ஆனந்த் லாக்கரில் இருந்து 75 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து 13.7 கோடி ரொக்கமும், கதிர் ஆனந்த் லாக்கரில் இருந்து 75 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
அமலாக்கத்துறை சோதனை!
கடந்த ஜனவரி 03ஆம் தேதி அன்று வேலூர் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம், வேலூர் எம்.பி கதிர் ஆனந்திற்கு தொடர்பு உடைய கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனின் இல்லம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை 3 நாட்கள் வரை நீண்டது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்திற்கு தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை நடப்பதாக அப்போது கூறப்பட்டது.
துரைமுருகன் சொன்னது என்ன?
அன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ரெய்டு குறித்த கேள்விக்கு, “இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும். என் வீட்டுக்கு வந்தது யார் என்று தெரியவில்லை. எனது வீட்டில் யாருமே கிடையாது. 2 வேலைக்காரர்கள்தான் அங்கு உள்ளார்கள். அங்கு உள்ளவர்கள் எந்த டிப்பார்ட்மண்டில் இருந்து வந்தார்கள் என்று தெரியாது” என கூறி இருந்தார்.
14 கோடி ரொக்கம் பறிமுதல்!
கிங்ஸ்டன் கல்லூரியில் 13.7 கோடி ரொக்கமும், கதிர் ஆனந்த் வீட்டின் லாக்கரில் இருந்து 75 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்கு சம்மன் அனுப்பி முறையான விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
2019 நாடாளுமன்றத் தேர்தல்! நடந்தது என்ன?
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தல் பணம் பறிமுதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு, ஏப்ரல் 18 தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இந்த நிலையில் துரைமுருகன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதன் எதிரொலியாக வேலூர் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலைரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.
இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில், திமுகவின் டி.எம். கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
