மதுரையில் விசிக கொடியேற்றம் எதிரொலி! வருவாய் ஆய்வாளர் உட்பட 3 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்!
மதுரையில் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் விசிக கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் அனிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மதுரையில் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் விசிக கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் அனிதா உட்பட 3 அரசு அலுவலகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் உள்ள 25 அடி உயர விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் 45 அடி உயர கொடிக்கம்பமாக மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வருவாய் ஆய்வாளர் அனிதாவை சஸ்பெண்ட் செய்து வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 25 அடி உயர கொடிக்கம்பம் ஆனது 45 அடி உயர கொடிக்கம்பமாக உயர்த்தப்பட்டது. மேலும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கொடியேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனை அடுத்து அனுமதியின்றி உயர்த்தப்பட்ட கொடிகம்பத்தில் கொடியேற்ற காவல்துறையினர் தடை விதித்தனர். காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக வெளிச்சநத்தம் பகுதியில் காவல்துறைக்கு எதிராக விசிகவினர் வாக்குவாதமும், தர்ணா போராட்டமும் நடத்தினர். இதன் எதிரொலியாக கொடிக்கம்பம் ஏற்றுவதற்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அன்று விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றி சென்றார்.
இந்த நிலையில் 25 அடி உயர கொடிக்கம்பம் 45 அடி உயர கொடிக்கம்பமாக மாற்றப்பட்டதை தடுக்கத் தவறிய காரணத்திற்காக வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி உள்ளிட்ட 3 பேரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். விசிக கொடிக்கம்பம் அனுமதியின்றி உயர்த்தப்பட்டதால் உண்டாகும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.