விசிக கொடி விவகாரம்! ஊழியர்கள் சஸ்பெண்ட் எதிரொலி! மதுரை வருவாய் துறையினர் காலவரையற்ற போராட்டம்!
இந்த பிரச்னைகளுக்கு கடைநிலை ஊழியர்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைக்குள் இதற்கு தீர்வு வராவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டத்தை விரிவு செய்வோம். பணிநீக்க ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
மதுரையில் அனுமதியின்றி விசிக கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் அனிதா உட்பட 3 அரசு அலுவலகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய் துறையினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அலுவலகங்களும் பூட்டு போட்டு மூடப்பட்டு உள்ளன. ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வருவாய் துறை ஊழியர்களை 3 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்து, ஏற்கெனவே இருந்த இடத்தில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் கொடிக்கம்பம் விவகாரத்தில் விசாரணைக்கு சென்ற வருவாய் துறை அலுவலகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் இதுவரை காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் முருகையின் இது குறித்து கூறுகையில், எந்த தவறும் செய்யாத வருவாய் துறை அலுவலர்கள் அரசியல் சதுரங்கத்தில் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளனர். நவம்பர் 26ஆம் தேதி முதல் இந்த பிரச்னை நடந்து வருகின்றது. மாவட்ட ஆட்சியர் டிசம்பர் 5ஆம் தேதி அன்று காவல்துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். மனுதாரரின் மனுவை ஆட்சியர் தள்ளுபடி செய்து இருக்கலாம். அல்லது காவல்துறை பந்தோபஸ்துக்கு நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால் இந்த பிரச்னைகளுக்கு கடைநிலை ஊழியர்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைக்குள் இதற்கு தீர்வு வராவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டத்தை விரிவு செய்வோம். பணிநீக்க ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
நடந்தது என்ன?
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 25 அடி உயர கொடிக்கம்பம் ஆனது 45 அடி உயர கொடிக்கம்பமாக உயர்த்தப்பட்டது. மேலும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கொடியேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனை அடுத்து அனுமதியின்றி உயர்த்தப்பட்ட கொடிகம்பத்தில் கொடியேற்ற காவல்துறையினர் தடை விதித்தனர். காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக வெளிச்சநத்தம் பகுதியில் காவல்துறைக்கு எதிராக விசிகவினர் வாக்குவாதமும், தர்ணா போராட்டமும் நடத்தினர். இதன் எதிரொலியாக கொடிக்கம்பம் ஏற்றுவதற்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அன்று விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றி சென்றார்.
இந்த நிலையில் 25 அடி உயர கொடிக்கம்பம் 45 அடி உயர கொடிக்கம்பமாக மாற்றப்பட்டதை தடுக்கத் தவறிய காரணத்திற்காக வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி உள்ளிட்ட 3 பேரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.
டாபிக்ஸ்