Devaneya Pavanar: ’தனித் தமிழ் தெரியும்!’ தேவநேய பாவாணரை தெரியுமா?
”Devaneya Pavanar: தமிழ்மொழியின் அதன் சொந்த அக வளங்கள் மூலம் செழுமைப்படுத்துவதிலும் அதன் பழங்கால சொற்களஞ்சியத்தை மீட்டெடுப்பதிலும் நேரம் செலவிட்ட பாவானர். பல தமிழ் சொற்களின் சுயாதீன வேர்கள் குறித்த ஆய்வை உலகிற்கு தெரியப்படுத்தினார்”

தனித் தமிழ் இயக்க வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயராக தேவநேய பாவாணரின் பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள புறக்கடையான்பட்டி எனும் ஊரில் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பிறந்த தேவநேய பாவாணரின் இயற்பெயர் ஜி.தேவநேசன் என்பதாகும்.
ஆம்பூரிலும், பாளையங்கோட்டையிலும் பள்ளிக்கல்வியை முடித்த பாவாணர் ஆசிரியராக உயர்ந்தார். பின்னர் 1924ஆம் ஆண்டில் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்ப் பண்டிதர் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
திராவிட மரபு தோன்றிய இடம் கடல் கொண்ட தென்குமரி நிலம்தான் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தபோது அதனை அன்று சென்னை பல்கலைக்கழகம் ஏற்க மறுத்தது. 1952ஆம் ஆண்டில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மறைமலை அடிகள் முன்னெடுத்த தனித்தமிழ் இயக்கம் மீது பற்றுக் கொண்ட பாவாணர் தொடர் தமிழ் பணிகளுக்காக தம்மை அர்பணித்துக் கொண்டார்.
திராவிட மொழிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.
சொற்பிறப்பியல், இலக்கணம் மற்றும் இலக்கிய பகுப்பாய்வு போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்து 35க்கும் மேற்பட்ட தொகுதிகளை எழுதியு உள்ளார். தமிழ் சொற்பிறப்பியல் அகராதி, தமிழ் சொற்களின் தோற்றம் மற்றும் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.
தமிழ் மொழியின் அதன் சொந்த அக வளங்கள் மூலம் செழுமைப்படுத்துவதிலும் அதன் பழங்கால சொற்களஞ்சியத்தை மீட்டெடுப்பதிலும் நேரம் செலவிட்ட பாவாணர். பல தமிழ் சொற்களின் சுயாதீன வேர்கள் குறித்த ஆய்வை உலகிற்கு தெரியப்படுத்தினார். அவரது சொற்பிறப்பியல் அகரமுதலி இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்த நூலாக விளங்குகிறது.
1968ஆம் ஆண்டில் தனித்தமிழ்க் கழகம் நிறுவப்பட்டபோது அதன் தலைவராகவும். 1974ஆம் ஆண்டில் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகவும் பாவாணர் பணியாற்றி உள்ளார்.
உடல் நலம் குன்றிய பாவாணர் 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி மறைந்தார். 1996ஆம் ஆண்டில் அவரது நூல்கள் அரசுடமையாக்கப்பட்டன.

டாபிக்ஸ்