2036 வரை திமுக ஆட்சியா? ’ஆசை இருக்கலாம்; பேராசை இருக்க கூடாது!’ ஸ்டாலினை கலாய்க்கும் ஆர்.பி.உதயகுமார்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  2036 வரை திமுக ஆட்சியா? ’ஆசை இருக்கலாம்; பேராசை இருக்க கூடாது!’ ஸ்டாலினை கலாய்க்கும் ஆர்.பி.உதயகுமார்!

2036 வரை திமுக ஆட்சியா? ’ஆசை இருக்கலாம்; பேராசை இருக்க கூடாது!’ ஸ்டாலினை கலாய்க்கும் ஆர்.பி.உதயகுமார்!

Kathiravan V HT Tamil
Published May 18, 2025 10:40 AM IST

”2026, 2031, மற்றும் 2036 ஆண்டுகளில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு, அவரது குடும்பத்தின் தொழில் வளர்ச்சிக்காகவே என்று அவர் குற்றம்சாட்டினார்”

2036 வரை திமுக ஆட்சியா? ’ஆசை இருக்கலாம்; பேராசை இருக்க கூடாது!’ ஸ்டாலினை கலாய்க்கும் ஆர்.பி.உதயகுமார்!
2036 வரை திமுக ஆட்சியா? ’ஆசை இருக்கலாம்; பேராசை இருக்க கூடாது!’ ஸ்டாலினை கலாய்க்கும் ஆர்.பி.உதயகுமார்!

பேராசையால் பெரு நஷ்டம்

ஆர்.பி. உதயகுமார், ஸ்டாலினின் "அடுத்த 15 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி" என்ற கூற்றை குறிப்பிட்டு, "மனிதனுக்கு ஆசை இருக்கலாம், ஆனால் பேராசை இருக்கக் கூடாது. பேராசை பெரு நஷ்டம் என்று கிராமத்து குழந்தைகளுக்குக் கூட தெரியும். ஆனால், இந்த பழமொழி ஸ்டாலினுக்கு தெரியவில்லை," என்று கிண்டலடித்தார். 2026, 2031, மற்றும் 2036 ஆண்டுகளில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு, அவரது குடும்பத்தின் தொழில் வளர்ச்சிக்காகவே என்று அவர் குற்றம்சாட்டினார்.

குடும்ப தொழில் வளர்ச்சியா?

உதயகுமார், ஸ்டாலினின் குடும்பத்தினர் சினிமா துறையில் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து, டான் மற்றும் ரெட்ஜெய்ன்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் அபாரமான பொருளாதார வளர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறினார். "ஒரே ஆண்டில் ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே இந்த யோகம் கிடைத்துள்ளது," என்று அவர் விமர்சித்தார். மக்கள் இதைப் பார்த்து வியந்து, கன்னத்தில் கை வைத்து நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு தூற்றும் ஆட்சியா?

ஸ்டாலின் தனது நான்கு ஆண்டு ஆட்சியை "நாடு போற்றும் ஆட்சி" என்று கூறுவதை மறுத்த உதயகுமார், "மக்கள் இதை நாடு தூற்றும் ஆட்சி என்று கூறுகின்றனர். இந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சம்அல்ல," என்று தெரிவித்தார். ஸ்டாலின் "வேறு உலகத்தில் இருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பிய அவர், மக்களின் நடப்பு பிரச்சினைகளைப் பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை என்று குற்றம்சாட்டினார்.

குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் குரல்

திமுக ஆட்சியின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வது அல்ல, மாறாக குடும்ப ஆதிக்கத்தையும் அதிகார எல்லையையும் விரிவுபடுத்துவதற்காகவே என்று உதயகுமார் கூறினார். "மக்கள் இனி ஒரு நாளும் ஸ்டாலினின் ஆட்சி தொடரக் கூடாது என்று நினைக்கின்றனர். உளவுத்துறை மற்றும் சர்வே அறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன," என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து கருணாநிதி குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இது சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவும் அவர் விமர்சித்தார்.

2026 தேர்தல்: மக்களாட்சிக்கு வாய்ப்பு

தமிழக மக்கள், எளியவராகவும், சாமானியராகவும், விவசாயியின் மகனாகவும் பணியாற்றிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராகப் பார்க்க விரும்புவதாக உதயகுமார் கூறினார். "2026 தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி மலரும். ஸ்டாலினின் பகல் கனவு நிச்சயம் நிறைவேறாது," என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கை

தமிழக மக்கள் குடும்ப ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், திமுக ஆட்சியால் மக்களின் ஜீவாதார உரிமைகள் பறிக்கப்பட்டு, 100 நாள் வேலைத் திட்ட சம்பளம் கூட வழங்கப்படாமல் இருப்பதாகவும் உதயகுமார் குற்றம்சாட்டினார். "அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். தமிழகம் படுகுழியில் செல்லாமல் இருக்க, மக்கள் எடப்பாடியாரைத் தேர்ந்தெடுப்பார்கள்," என்று அவர் முடித்தார்.