’4 ஆண்டுகளில் 7000 கொலைகள்’ திமுகவை சாடும் ஆர்.பி.உதயக்குமார்
”சோழர் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது போல, ஸ்டாலின் காலம் "வேதனை காலம்" என்பது இன்றைக்கு மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது”

கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் 7000 கொலைகள் நடைபெற்று உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 7000 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தனிமனித பாதுகாப்பின்மை
ஆர்.பி. உதயகுமார் தனது செய்தியாளர் சந்திப்பில், அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அணுகுண்டு விழுந்ததை போல அமைந்திருப்பதாக தெரிவித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு, ஊழல் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஏற்படுவது அனைவரும் அறிந்த பொதுவான ஒன்று என்றும், ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை விட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் "கின்னஸ் சாதனை" படைத்துள்ளார் என்று விமர்சித்தார். தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து, தமிழ்நாடு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.