Ramadoss Vs Anbumani: 'இது என் கட்சி! நான் சொல்றததான் கேக்கனும்!’ ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்!
பாமக இளைஞரணி தலைவராக மருத்துவர் ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமனை நியமித்ததற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் ஆன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் நடந்து உள்ளது.
பாமகவின் இளைஞரணி தலைவராக ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமனை நியமிப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மருத்துவர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாஸ், ”அன்புமணிக்க் உதவியாக, 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமெனில் நல்ல இளைஞர், மாநில இளைஞர் சங்க தலைவராக பரசுராமன் முகுந்தன் அவர்களை அறிவிக்கிறேன்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ் “எனக்கா? எனக்கெல்லாம் வேண்டாம். கட்சில 4 மாசத்திற்கு முன்னாடி வந்து இருக்கான். அவனுக்கு இளைஞர் சங்கம் என்றால் என்ன அனுபவம் உள்ளது?, வேறு யாராவது அனுபவசாலிகளை கொடுங்கள்” என கூறினார்.
நான் சொல்றததான் கேக்கணும்…!
“நான் சொல்றதுதான் யாரா இருந்தாலும் கேக்கனும். நான் சொல்றத கேக்கலனா, யாரும் இந்த கட்சில இருக்க முடியாது. இது நான் உண்டாக்குன கட்சி. நான் சொல்றத கேக்கடலனா யாரும் இந்த கட்சில இருக்க முடியாது” என கூறினார்.
அதற்கு ’அது சரி’ என அன்புமணி கூறிய நிலையில், ‘என்ன சரினா சரி…! போ அப்போ…!’ என ராமதாஸ் பேசியது பொதுக்குழுவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய மருத்துவர் ராமதாஸ் மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுகிறார் என அறிவித்தார்.
பனையூரில் தனி அலுவலகம் தொடங்கி உள்ளேன்!
இதனை அடுத்து பேசிய அன்புமணி ராமதாஸ் ‘பனையூரில் புதிய அலுவலகத்தை ஆரம்பித்து உள்ளேன். அங்கு வந்து என்னை பார்க்கலாம்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட ராமதாஸ், “முகுந்தன் உனக்கு உதவியாக இருக்க போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு இதில் விருப்பம் இல்லை எனில்…! அவ்வளவுதான் வேறு என்ன சொல்ல முடியும்” என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் “நான் தொடங்கிய கட்சியில் நான் சொல்வதை தான் கேட்கனும், விருப்பம் இல்லாதவர்கள் விலகி கொள்ளலாம்” என்றும் ராமதாஸ் கூறினார்.