Ramadoss: 'சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துங்க' - முதல்வரிடம் வலியுறுத்திய ராமதாஸ்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ராமதாஸ், தான் எழுதிய கடிதத்தை முதலமைச்சரிடம் கொடுத்தார்.

தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காக்க மாநில அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தான் எழுதிய கடிதத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் பார்த்து வழங்கினார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘’சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், சமூகநீதியை பாதுகாப்பதற்காக அவசரமாகவும், அவசியமாகவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராகிய தங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு கால கோரிக்கை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1881ஆம் ஆண்டில் தொடங்கி 1931ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் காரணமாக, 1941ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்படாத நிலையில், அப்போதிலிருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகான கோரிக்கைகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.