ADMK VS DMDK: ராஜ்யசபா சீட்! தேமுதிகவுக்கு கல்தா கொடுக்கிறாரா ஈபிஎஸ்! ஆழம் பார்க்கிறாரா பிரேமலதா?
Rajya Sabha Elections 2025: கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது மார்ச் 20ஆம் தேதி அன்று ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக - தேமுதிக தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் ராஜ்ஜியசபா சீட் தருவது பற்றி எந்த வாசகமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தேமுதிகவுக்கு ராஜ்ஜியசபா எம்.பி சீட் தர எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்ஜியசபாவில் தமிழ்நாட்டில் இருந்து 18 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதில் 6 எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
பதவி காலியாகும் எம்பிக்கள் யார்?
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை எம்பி தேர்தலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரசேகர் ஆகியோர் அதிமுக ஆதரவுடன் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
திமுகவில் யார் யாருக்கு சீட்
திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினர் ஆக உள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது திமுக தலைமையால் இறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போதைய எம்பியாக உள்ள வழக்கறிஞர் வில்சனுக்கும் மீண்டும் ராஜ்ஜியசபா வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் திட்டம் என்ன?
அதிமுகவை பொறுத்தவரை 2 ராஜ்ஜியசபா எம்பிக்கள் தேர்வு செய்யும் அளவுக்கு எம்.எல்.ஏக்கள் பலத்தை பெற்று உள்ளது. அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது வடமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் எம்.பி சீட் பகிர்ந்து அளிக்க கட்சித் தலைமை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ்ஜியசபா சீட் கேட்கும் தேமுதிக
இந்த நிலையில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ஜியசபா சீட்டை அதிமுக ஒப்பந்தம் செய்து உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறி இருப்பது புதிய விவாதங்களை கிளப்பி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”கூட்டணி அமையும் போதே பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்து இடப்பட்டதுதான் ராஜ்ஜியசபா. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தேமுதிக சார்பில் யார் டெல்லிக்கு செல்ல உள்ளனர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என கூறி இருந்தார். தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் எம்பி ஆக வாய்ப்பு உள்ளதாக தேமுதிக வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது.
ஒப்பந்தம் சொல்வது என்ன?
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது மார்ச் 20ஆம் தேதி அன்று ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக - தேமுதிக தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற வாசகம் மட்டுமே ஒப்பந்தத்தில் பதிவாகி இருந்தது. தேமுதிகவுக்கு ராஜ்ஜியசபா சீட்டு தருவது குறித்து எந்த வாசகங்களும் அதில் இடம்பெறவில்லை.
இது தொடர்பாக அப்போதே பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு. ”ஒரு நல்ல செய்தி, வெற்றி செய்தி நாளைய தினம் (21-03-2024) எங்கள் தலைமை கழகத்தில் அறிவிக்கப்படும்” என தெரிவித்திருந்தார். ஆனால் மார்ச் 21ஆம் தேதி தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தூண்டில் போடுகிறாரா பிரேமலதா
இந்த நிலையில் ராஜ்ஜியசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானதாக பிரேமலதா விஜயகாந்த் பேசி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக கூட்டணி அமைக்க திணறி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள ஒரே ஒரு பெரிய கட்சியாக தேமுதிக மட்டுமே உள்ளது. இந்த நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பிரேமலதா விஜயகாந்த் எம்.பி சீட்டுக்கு தூண்டில் போடுகிறாரா என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வி.
